கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சுமார் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு பணி வழங்கப்பட்டிருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபரில் ரோஜ்கர் மேளா என்ற வேலைவாய்ப்பு திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இதன்மூலம் மத்திய அரசு துறைகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதன்படி கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் வரை 7 லட்சம் பேருக்கு அரசு பணி வழங்கப்பட்டது. கடந்த பிப்ரவரியில் நடத்தப்பட்ட ரோஜ்கர் மேளாவில் ஒரு லட்சம் பேருக்கு அரசு பணிக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று நரேந்திர மோடி 3-வது முறை பிரதமராக பதவியேற்றார். புதிய அரசு பதவியேற்ற பிறகு கடந்த அக்டோபரில் 13-வது ரோஜ்கர் மேளா நடத்தப்பட்டது. அப்போது 51,000 பேருக்கு மத்திய அரசு பணிக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
இதன்தொடர்ச்சியாக 14-வது ரோஜ்கர் மேளா நேற்று நடைபெற்றது. அப்போது நாடு முழுவதும் 71,000 பேருக்கு மத்திய அரசு பணிக்கான ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:
ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வாழ்வில் புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது. உங்களது கடின உழைப்புக்கு பலன் கிடைத்திருக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில், சுமார் 10 லட்சம் பேருக்கு அரசு பணி வழங்கப்பட்டு, புதிய சாதனை படைக்கப்பட்டு உள்ளது. புதிய அரசு ஊழியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடனும், நேர்மையுடனும் நாட்டுக்கு சேவையாற்றி வருகின்றனர்.
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது இளைஞர்களின் கடின உழைப்பு, திறன், தலைமைப் பண்பு ஆகியவற்றை சார்ந்து இருக்கிறது. இதன்காரணமாக திறமையான இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. வரும் 2047 – ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இதற்கு இளைஞர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இந்தியாவில் தயாரிப்போம், சுயசார்பு இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா போன்ற பல்வேறு திட்டங்கள், இளைஞர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்கின்றன.
தற்போது உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது. மொபைல் போன் உற்பத்தியில் உலகின் 2-வது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்து உள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, இயற்கை விவசாயம், விண்வெளி, பாதுகாப்பு, சுற்றுலா, சுகாதாரம் ஆகிய துறைகளிலும் இந்தியா அதிவேகமாக முன்னேறி வருகிறது. நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவும், புதிய இந்தியாவை கட்டமைக்கவும், இளம் திறமையாளர்களை உருவாக்குவது மிகவும் முக்கியமானது.
இதை கருத்தில் கொண்டு புதிய கல்விக் கொள்கை அமல் செய்யப்பட்டிருக்கிறது. அடல் சிந்தனை ஆய்வகங்கள், பிரதமரின் ஸ்ரீ பள்ளிகள் போன்ற முயற்சிகளும் புதுமைகளுக்கு உத்வேகம் அளிக்கிறது. தாய்மொழியில் கற்கவும் தேர்வுகளை எழுதவும் அனுமதிக்கப்படுகிறது. இதன்மூலம் மொழி தொடர்பான தடைகள் நீக்கப்பட்டு உள்ளன.
எல்லைப் பகுதி கிராமங்களை சேர்ந்த இளைஞர்களுக்கான இடஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. இன்றைய தினம் 50,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மத்திய பாதுகாப்பு படைகளில் சேருவதற்கான பணி ஆணைகளை பெற்றுள்ளனர்.
இன்று சவுத்ரி சரண் சிங்கின் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. விவசாயிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த தினத்தை விவசாயிகள் தினமாக கொண்டாடுகிறோம். மத்திய அரசின் தீவிர முயற்சிகளால் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் புதிய வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர்.
வேளாண் சந்தைகளை இணைக்கும் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது. பெட்ரோலுடன் எத்தனால் கலக்கப்படுவதால் விவசாயிகள் பலன் அடைந்து வருகின்றனர். சுமார் 9,000 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. ஆயிரக்கணக்கான தானிய சேமிப்பு கிடங்குகளை அமைப்பதற்கான பெரிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசு பெண்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக லட்சாதிபதி சகோதரி திட்டம் வெற்றிகரமாக அமல் செய்யப்பட்டிருக்கிறது. மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. முத்ரா யோஜ்னா திட்டத்தில் பெண்களுக்கு தொழில் கடன் வழங்கப்படுகிறது. பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
பல்வேறு பள்ளிகளில் மாணவிகளுக்காக தனி கழிப்பறைகள் இல்லாததால் அவர்கள் பாதிப்பை பாதியில் கைவிடும் நிலை இருந்தது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பள்ளிகளில் மாணவிகளுக்காக தனி கழிப்பறைகள் கட்டப்பட்டு இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. நாடு முழுவதும் 30 கோடி பெண்களுக்கு ஜன் தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன. இதன்மூலம் மத்திய அரசின் மானிய நிதியுதவி பெண்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகிறது.இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.