ஜெய்ஷ்-இ-முகம்மது (ஜேஇஎம்) தீவிரவாத அமைப்புடன் பாகிஸ்தானின் ஆபத்தான உறவை பிரான்ஸ் நாட்டின் ஒரு பருவ இதழ் அம்பலப்படுத்தியுள்ளது.
பிாரன்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் இருந்து ‘லே ஸ்பெக்டகிள் டு மாண்டே’ என்ற பிரெஞ்சு பருவ இதழ் வெளியாகிறது. இதில் பாகிஸ்தானில் ஜேஇஎம்-மின் செயல்பாடுகள் குறித்த புலனாய்வு கட்டுரை வெளியாகியுள்ளது. தீவிரவாதத்தை எதிர்த்து போரிட வேண்டிய கடமை பாகிஸ்தானுக்கு இருந்தபோதிலும் அந்நாடு தீவிரவாத அமைப்புகளுக்கு புகலிடம் அளித்து வருவதை அந்தக் கட்டுரை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. பாகிஸ்தானில் குறிப்பாக பஞ்சாப் மாகாணத்தின் பகவல்பூர் பகுதியில் ஜேஇஎம் எழுச்சி பெற்று விளங்குவதை அந்தக் கட்டுரை விளக்குகிறது.
அந்தக் கட்டுரையில், “பகவல்பூரில் 2 வளாகங்கள் உட்பட பஞ்சாப் மாகாணத்தில் பல வளாகங்களை ஜேஇஎம் கொண்டுள்ளது. இவற்றில், தங்கும் வசதியுடன் மதபோதனை மற்றும் தீவிரவாத பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. இந்த வளாகங்களில் ஒன்று பாகிஸ்தான் ராணுவ முகாமில் இருந்து வெறும் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. பகவல்பூரில் உள்ள ‘மர்கஸ் சுபான் அல்லா’ என்ற பயிற்சி வளாகத்தை ஜேஇஎம் தலைவர் மசூத் அசாரின் மருமகன் முகம்மது அதவுல்லா காசிப் நிர்வகித்து வருகிறார். இங்கு 600 முதல் 700 உறுப்பினர்கள் பயிற்சி பெற்று வரும் நிலையில் அவர்களுக்கு 40 முதல் 50 ஆசிரியர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர்” என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு, செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் நேரில் கண்டவர்கள் அளித்த தகவல்களை ஆதாரமாக அந்த இதழ் கூறியுள்ளது. மேலும் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வரும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் ஜேஇஎம்-ன் பல்லாண்டு கால தொடர்புகளையும் அந்தக் கட்டுரை விளக்குகிறது.
கடந்த வியாழக்கிழமை அமெரிக்க அதிபர் மாளிகையின் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “பாகிஸ்தானின் அதிநவீன ஏவுகணை தொழில்நுட்பம் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. இந்த ஏவுகணைகள் அமெரிக்கா உட்பட தெற்காசியாவுக்கு அப்பால் உள்ள இலக்குகளை தாக்கும் திறனை கொண்டிருக்கும்” என்றார்.
பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான விண்வெளி மற்றும் பாதுகாப்பு அமைப்பு உட்பட அந்நாட்டின் 4 நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததை தொடர்ந்து அந்த அதிகாரி இக்கருத்தை கூறினார். இந்நிலையில் பிரெஞ்சு இதழில் வெளியாகியுள்ள கட்டுரை பாகிஸ்தானுக்கு மற்றொரு பின்னடைவாக கருதப்படுகிறது.