தனித்துவமான ஒலி அனுபவத்தை வழங்கும் சென்னையில் மதரசனா திருவிழா – இசை நிகழ்ச்சி: டிச. 26-ம் தேதி வரை நடக்கிறது

சென்னை: தனித்துவமான ஒலி அனுபவத்தை வழங்கும் வகையில், மதரசனா திருவிழா – இசை நிகழ்ச்சி சென்னையில் வரும் டிச.26-ம் தேதி வரை நடைபெறுகிறது. மார்கழி மாதத்தையொட்டி மதரசனா அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் கர்நாடக இசைக் கலைஞர்களின் புகழ்பெற்ற இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் நடப்பாண்டில் ‘மதரசனா திருவிழா 2024’ சென்னை தரமணியில் உள்ள ஆசிய ஊடகவியல் கல்லூரியின் எம்.எஸ்.சுப்புலட்சுமி அரங்கில் நேற்று தொடங்கியது. தனித்துவமான ஒலி இசை அனுபவத்தை வழங்கும் இந்த இசை விழா வரும் டிச.26-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறுகிறது.

இதில் தமிழகத்தை சேர்ந்த 10 கர்நாடக இசைக் கலைஞர்கள் பங்கேற்று, இசைக் கச்சேரிகளை நடத்துக்கின்றனர். நிகழ்ச்சியில் இசைக் கலைஞர்கள் ஒலிப்பெருக்கி, ஒலிவாங்கி போன்ற கருவிகளை பயன்படுத்தாததால், வயலின், தம்புரா, மிருதங்கம் போன்ற இசைக் கருவிகளின் ஒலிகளை அரங்கில் உள்ள பார்வையாளர்கள் நேரடியாக கேட்டு ரசிக்கும் படியான புது அனுபவத்தை வழங்குகிறது. இதன்மூலம் பார்வையாளர்கள் இசையுடன் ஒன்றியிருந்ததை காண முடிந்தது.

தொடக்க விழாவில் இசைக் கலைஞர்கள் லால்குடி கிருஷ்ணன், லால்குடி விஜயலட்சுமி குழுவினரின் இசைக் கச்சேரியும், அபிஷேக் ரகுராம் குழுவினரின் இசைக் கச்சேரியும் நேற்று அரங்கேறின. அதைத்தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) இசைக் கலைஞர்கள் அம்ருதா வெங்கடேஷ், மல்லாடி ட்ரியோ குழுவினர்களின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) சாகேத் ராமன், சந்தீப் நாராயணனின் கச்சேரிகள் நடைபெறும்.

இதுதொடர்பாக மதரசனா அறக்கட்டளை நிறுவனர் மகேஷ் வெங்கடேஸ்வரன் கூறுகையில், “இந்த இசை விழாவில் ஒலியை பெருக்கும் எந்த கருவிகளும் பயன்படுத்தவில்லை என்பதால், இது பார்வையாளர்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தை வழங்கும். மேடையில் இசைக்கப்படும் கருவிகளின் துல்லியமான ஒலியை அரங்கில் இருப்பவர்கள் கேட்டு மகிழலாம்.” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.