புதுடெல்லி: சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதியதில் முறைகேடுகளில் ஈடுபட்ட பூஜா கேத்கருக்கு, எதிராக தொடரப்பட்ட கிரிமினல் வழக்கில். டெல்லி உயர் நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
மகாராஷ்டிராவில் பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வந்த பூஜா கேத்கர் போலிச் சான்றிதழ் கொடுத்து தேர்வில் வெற்றி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், சலுகைகளை பெற உடலில் குறைபாடு உள்ளவர் என போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாகவும், ஓபிசி வகுப்பு சான்றிதழை முறைகேடாக பெற்றதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக எழுந்தன.
இதையடுத்து, பூஜா கேத்கர் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றதை ரத்து செய்த மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), வரும் காலங்களில் தேர்வு எழுதுவதற்கும் தடை விதித்தது. இதன் பின்னர், அவர் முன்ஜாமீன் வழங்கக் கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று நீதிபதி சந்திர தாரி சிங் முன் விசாரணைக்கு வந்தது.
இதையடுத்து நீதிபதி, ”பூஜா கேத்கருக்கு எதிராக வலுவான வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பின்னால் இருக்கும் சதியை வெளிக் கொண்டுவர விசாரணை தேவை. மேலும் அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டால் விசாரணை பாதிக்கப்படும்” என்று கூறி, முன்ஜாமீன் வழங்கக் கோரிய பூஜா கேத்கரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவித்தார். யுபிஎஸ்சி சார்பில் மூத்த வழக்கறிஞர் நரேஷ் கௌசிக் மற்றும் வழக்கறிஞர் வர்த்மான் கவுசிக் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் பூஜா கேத்கர் மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.