ரஷியாவின் 52 ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன்

கீவ்,

ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷியா தொடக்கத்தில் கைப்பற்றியது. எனினும், பின்னர் அவற்றை உக்ரைன் பதிலடி கொடுத்து மீட்டது. இரு நாடுகளும் போரை தீவிரப்படுத்தி உள்ளன. போரை முடிவுக்கு கொண்டு வரும் தூதரக மற்றும் அமைதி பேச்சுவார்த்தை இதில் பெரிய பலன் எதனையும் தரவில்லை.

உக்ரைன் தொடர்ந்து அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் ஆதரவை கோரி வருகின்றது. இதற்கேற்ப, அந்நாடுகளும் ராணுவம் மற்றும் நிதியுதவியை வழங்கி வருகின்றன.

ரஷியாவுக்கு வடகொரியாவும் ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது என கூறப்படுகிறது. இது போரை தீவிரப்படுத்தும் செயல் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார். இதனால், போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் பலன் ஏற்படாது என்றும் கூறினார். எனினும், போர் முடிவுக்கு வராத நிலை காணப்படுகிறது.

இந்நிலையில், ரஷிய படைகளின் தாக்குதலை உக்ரைனின் விமான படை இன்று முறியடித்து உள்ளது. ஷாகித் ஆளில்லா விமானங்கள் உள்ளிட்ட ஆளில்லா விமானங்களை கொண்டு ரஷிய வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது. இதில், 103 ஆளில்லா விமானங்கள் தாக்குதலை நடத்தியுள்ளன. அவற்றில், 52 ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தி விட்டோம் என உக்ரைன் தெரிவித்து உள்ளது.

எனினும், இந்த தாக்குதலில் உக்ரைனில் உள்ள தனியார் சொத்துகள் மற்றும் பொதுமக்களின் உட்கட்டமைப்புகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஆனால், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.