வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி வெற்றி பெற்றதை எதிர்த்து பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதிக்கு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முதல் முறையாக போட்டியிட்ட பிரியங்கா காந்தி வெற்றி பெற்றார். இந்நிலையில், இதே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நவ்யா ஹரிதாஸ் கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி, தனது வேட்பு மனுவில் அவருடைய மற்றும் குடும்ப சொத்து விவரங்களை சரியாகக் குறிப்பிடவில்லை. மேலும் தவறான தகவல்களை வழங்கி உள்ளார். இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. அத்துடன் ஊழல் நடவடிக்கைக்கு சமமானது ஆகும். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்” என கூறியுள்ளார்.
இதுகுறித்து நவ்யா ஹிரதாஸ் நேற்று கூறும்போது, “பிரியங்கா காந்தி தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்களை சரியாக குறிப்பிடவில்லை என தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தேன். ஆனால் அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன்” என்றார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிரமோத் திவாரி கூறும்போது, “நவ்யா ஹரிதாஸ் மலிவான விளம்பரத்துக்காக இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அவரது மனு நிராகரிக்கப்படுவதுடன் நீதிமன்றம் அவருக்கு அபராதம் விதிக்கும்” என்றார்.