சேலம்: “மூன்று ஆண்டுகளில் திமுக அரசு எதையும் செய்யவில்லை என்று முன்னாள் முதல்வர் பழனிசாமி, முழு சோற்றில் பூசணிக்காயை மறைக்கிறார்,” என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார்.
சேலம் மண்டல திமுக தவகல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனைக கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்துக்கு, சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மேற்கு மாவட்ட செயலாளர் எம்பி டி.எம்.செல்வகணபதி முன்னிலை வகித்தனர். இதில் தகவல் தொழில்நுட்ப அணி மாநிலதுணை செயலாளர் டாக்டர் தருண் வரவேற்றார்.
இதில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியது: “பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல கோடி ரூபாய் பணத்தை செலவிட்டு தொழில்முறை கட்டமைப்பை உருவாக்கினாலும், அதை திமுக ஐ.டி. பிரிவு நிச்சயம் முறியடிக்கும். இன்ஸ்டாகிராமை இஷ்ட கிராமாக இளைஞர்கள் பயன்படுத்துகின்றனர். வாட்ஸ் அப், முகநூல் என அனைத்து ஊடகங்களில் அரசியல் நிகழ்வை விரல் நுனியில் வைத்திருந்து ஐ.டி விங் நிர்வாகிகள் சரியான தகவல்களை கொடுத்தால்தான் மற்றவர்களை எதிர்கொள்ள முடியும்.
முதல்வர், துணை முதல்வர், மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், எம்பி-க்கள் ஆக்கபூர்வ நடவடிக்கைகளை சமூக ஊடகங்களில் உடனுக்குடன் பரப்ப வேண்டும். அதிகாரபூர்வ பக்கங்களை பின்தொடர்வதுடன், லைக் அதிகம் கொடுக்க வேண்டும். லைக் கொடுக்காவிட்டால் மங்கி விடுவீர்கள். முழுமையான தரவுகள் இல்லாவிட்டால் பின்தங்கி விடுவீர்கள். தேசிய மற்றும் சர்வதேச அளவில் தகவல்களை பரப்பும் எக்ஸ் தளத்தில் கணக்கு தொடங்கி , ஹேஷ்டேக் டிரண்டிங் செய்வதில் அதிக பங்களிப்பினை ஐ.டி விங் நிர்வாகிகள் பரப்ப வேண்டும்.
திமுக அரசின் சாதனைகளை இன்ஸ்டாகிராம் மூலம் வீடியோக்களாக, புகைப்படங்களாக கொண்டு சேர்க்க வேண்டும். கட்சி தொண்டர்கள் ஒவ்வொருவரும் உண்மை செய்திகளை பகிர வேண்டும். அரசியல் சார்ந்த குழுக்கள் உள்ளிட்ட மூன்று பகுதியாக பிரித்துக் கொண்டு முன்னுரிமை அடிப்படையில் தகவல்களை பகிர வேண்டும். யூடியூப் அதிகளவில் கன்டன்ட் உள்ளது. அதில்தான் அறிவாளிகள் அதிகம் பேசுகிறார்கள்.
யூடியூப்பை அதிகம் பயன்படுத்த வேண்டும். வரும் தேர்தலில் ஐ.டி விங் பங்கு மிகப் பெரியது. தேர்தலுக்கு பின்னால் சிறப்பாக ஆட்சிக்கும் கட்சிக்கும் தேர்தலுக்கும் பயன்பட்டது என்பதை கண்டறிந்து ஐ.டி. விங்குக்கு பரிசு கொடுக்க வேண்டும்,” என்று அவர் பேசினார்.
தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசும் போது, “தற்போது காலம் மாறிவிட்டன. இளைஞர்கள் கையில் தான் கட்சி இருக்கிறது. நம்முடைய செய்திகளை படிக்க வேண்டும். முன்னாள் முதல்வர் பழனிசாமி வாயாலேயே வடை சுட்டுக் கொண்டிருக்கிறார். மூன்று ஆண்டுகளில் திமுக அரசு எதையும் செய்யவில்லை என முழு சோற்றில் பூசணிக்காயை மறைக்கிறார். எதையுமே செய்யாமல் கொள்ளை அடித்தவர் கூறும் கருத்துக்கு நம்முடைய நிர்வாகிகள் பதில் கொடுக்க வேண்டும்.
முதல்வரை தரக்குறைவாக பேசும் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு திமுக-வினர் பதிலடி கொடுத்து முறியடிக்க வேண்டும். இதற்கெல்லாம் கருவியாக ஐ.டி விங் நிர்வாகிகள் செயல்பட்டு கொள்கை வீரர்களாக செயல்பட வேண்டும்,” என்றார். இதில் எம்பி-க்கள் மலையரசன், மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.