அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல்நாள் முதல் எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவந்த வேளையில், பா.ஜ.க அரசு `ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. இந்த மசோதா மீது மக்களவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பெரும்பான்மைக்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் பா.ஜ.க அரசுக்கு கிடைக்கவில்லை.
அதைத்தொடர்ந்து, மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அடங்கிய நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு இந்த மசோதா அனுப்பப்பட்டது. அந்தக் குழுவின் இறுதி அறிக்கைக்குப் பின்னர் இந்த மசோதா மீண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படலாம்.
இதுவொருபுறமிருந்தாலும், மாநிலங்களுக்கும், மக்களவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பது பற்றி அறிய விகடன் இணையதளத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
அதில், `ஒரே நாடு ஒரே தேர்தல் முறை…’ என்ற கேள்வி கொடுக்கப்பட்டு, `தேவை, தேவையில்லை, கருத்து இல்லை’ என்ற மூன்று விருப்பங்களும் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கருத்துக்கணிப்பு முடிவில் `அதிகபட்சமாக 62 சதவிகிதம் பேர் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை தேவையில்லை’ என்று தெரிவித்திருக்கின்றனர். 35 சதவிகிதம் பேர் தேவை என்றும், 3 சதவிகிதம் பேர் கருத்து இல்லை என்றும் தெரிவித்திருக்கின்றனர்.
மத்திய அரசுப் பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளில் கட்டாய தேர்ச்சி முறையை மத்திய அரசு ரத்து செய்திருப்பது தொடர்பாக விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதில் கலந்துகொள்ள பின்வரும் லிங்கை க்ளிக் செய்யவும்… https://www.vikatan.com/