பழம்பெரும் திரைப்பட இயக்குநர் ஷ்யாம் பெனகல் இன்று (23.12.2024) தனது 90 வயதில் உயிரிழந்துள்ளார்.
மும்பையில் கல்லீரல் தொடர்பான நோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று மாலை 6:30 மணியளவில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
இந்திய திரையுலகிலும் அதற்கு வெளியிலும் முக்கிய ஆளுமையாக திகழும் இவரது உயிரிழப்பு பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Shyam Benegal
ஷ்யாம் பெனகல் திரைத்துறையில் தனது செயல்பாடுகளுக்காக இந்திய அரசின் பத்ம ஶ்ரீ (1976), பத்ம பூஷன் (1991) ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். மாநிலங்களவை நியமன உறுப்பினராகவும் பணியாற்றியிருக்கிறார்.
இந்தியா திரையுலகில் மாற்று சினிமா பாணியைக் கைக்கொண்ட மூத்தோர்களில் ஒருவராக கருதப்படுகிறார் பெனகல். இந்திய சமூகத்தின் அப்பட்டமான சித்தரிப்புகளும் கடுமையான சமூக கருத்துகளும் இவரது திரைப்படங்களில் இடம்பெறுவது வழக்கம்.
அமெரிக்கா ரிட்டர்ன்!
1934-ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவின் ஹைத்ராபாத் மாகாணத்தின் திருமலகிரி என்ற ஊரில் பிறந்தவர். இவரது மாமா குருதத் திரைப்பட இயக்குநராகவும் நடிகராகவும் இருந்ததால் பெனகலுக்குன் இளம் வயதிலேயே சினிமா ஆர்வம் உருவானது.
கல்லூரி படிப்புக்குப் பிறகு பாம்பேவில் உள்ள நிறுவனத்தில் இணைந்து விளம்பரப்படங்களை எடுக்கத் தொடங்கினார். புனே ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடூட்டின் தலைவராக பணியாற்றியிருக்கிறார். நியூயார்க்கில் உள்ள சில்ட்ரன்ஸ் டெலிவிஷன் பயிற்சிப் பட்டறையில் பணியாற்றியுள்ளார். நியுயார்க்கில் இருந்து இந்தியா திரும்பியவர் 1973-ம் ஆண்டு தனது முதல் திரைப்படத்தை இயக்கினார்.
தனித்துவமான திரைமொழி!
ஆங்கூர் (1973), நிஷந்த் (1975), மந்தன் (1976), பூமிகா (1977), மம்மோ (1994), சர்தாரி பேகம் (1996), ஜுபைதா (2001) ஆகியன இவரது முக்கிய படைப்புகளாக கருதப்படுகின்றன. பல குறும்படங்களையும், தொடர்களையும் தயாரித்துள்ளார்.
அன்றைய சுயாதீன திரைப்பட இயக்குநர்களின் கலையம்சம் பொருந்திய படங்கள் வெகுசன மக்களை ஈர்க்க தவறியபோது, இவரது படங்கள் சமூக கருத்துகளை வலுவாகக் கூறும் அதே வேளையில் வணிக ரீதியிலாகவும் வெற்றி பெற்றன.
விருதுகள்!
இவரது 7 திரைப்படங்கள் தேசிய விருது வென்றுள்ளன. சிறந்த இந்தி இயக்குநருக்கான தேசிய விருதை 5 முறை பெற்ற ஒரே இயக்குநர் என்ற தனிப்பெருமை பெற்றவர். இந்திய சினிமாவின் உயரிய விருதுகளில் ஒன்றான தாதா சாஹேப் பால்கே விருதும் பெற்றுள்ளார்.
கேன்ஸ், பெர்லின், மாஸ்கோ உள்ளிட்ட சர்வதேச திரைப்பட விழாக்களிலும் விருதுகள் வென்றுள்ளார். 2012-ல் லண்டனில் உள்ள சவுத் ஏஷியன் சினிமா ஃபவுண்டேஷன், எக்ஸலன்ஸ் இன் சினிமா அவார்ட் என்ற விருதினை வழங்கியது.
லெஜண்டுக்கு அஞ்சலி!
கடந்த டிசம்பர் 14-ம் தேதிதான் இவரது 90-வது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார். அதில், குல்பூஷன் கர்பண்டா, நசிருதீன் ஷா, திவ்யா தத்தா, ஷபானா ஆஸ்மி, ரஜித் கபூர், அதுல் திவாரி, குணால் கபூர் உள்ளிட்ட பல திரைத்துறையினர் கலந்து கொண்டுள்ளனர். இவரது மறைவால் பலருக்கும் அது மீண்டும் கிடைக்காத வாழ்நாள் முழுமைக்கு நினைவுகூறக் கூடிய நாளாக மாறியிருக்கிறது.
பாலிவுட் மட்டுமல்லாமல் உலக, இந்திய திரையுலங்கள் எல்லாமும் அவரை நினைவுகூறுகின்றன.