Viduthalai 2: `அந்த வசனத்தை யாரையும் மனதில் வைத்து வெற்றிமாறன் சொல்லவில்லை’ – தொல்.திருமாவளவன்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிப்பில், இளையராஜா இசையில் உருவாகியுள்ள ‘விடுதலை- 2’ கடந்த 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ‘விடுதலை 2’ படத்தைப் பார்த்தப் பிறகு வெற்றிமாறன், நடிகர் விஜய் சேதுபதி ஆகியோரை நேரில் சந்தித்து பாராட்டி இருக்கிறார். பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “ வெற்றிமாறனின் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களின் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘விடுதலை பாகம் 2’ படத்தைப் பார்த்தோம். தமிழ் திரையுலகில் மிக முக்கியமான ஒரு படைப்பாக வெளி வந்திருக்கிறது. அதுவும் தேவையான ஒரு காலச் சூழலில் இந்தப் படம் வெளியாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

விடுதலை- 2

இந்திய அரசியலில் வலது சாரி ஆதிக்கம் மேலோங்கி இருக்கும் காலக்கட்டம் இது. இந்த வலது சாரி அரசியல் வளர்ந்து வரும் சூழலில் இடது சாரி அரசியலின் தேவையை இளம் தலைமுறையினருக்கு வலியுறுத்தக்கூடிய மகத்தான ஒரு படமாக ‘விடுதலை 2’ வெளிவந்திருக்கிறது. இயக்குநர் வெற்றிமாறன் இதுவரை இயக்கியுள்ள அனைத்துப் படங்களுமே மக்கள் செல்வாக்கோடு மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. அந்தவரிசையில் இதுவும் ஒரு வெற்றிகரமான திரைப்படம். அதேவேளையில் இந்தப் படம் பேசியிருக்கிற அரசியல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

`கம்யூனிஸ்ட் கட்சிகளில் இரண்டு வகை உண்டு’

நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்டு தேர்தல் களத்தில் பங்கேற்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பேசுகிற அரசியல், நாடாளுமன்ற ஜனநாயகத்தை மறுத்து மக்களை அரசியல்படுத்தி, புரட்சிகர ஜனநாயகத்தை வென்றெடுக்க வேண்டும் எனப் பேசுகிற கம்யூனிஸ்ட் அரசியல் இன்னொன்று. கம்யூனிஸ்ட் கட்சிகளில் இரண்டு வகை உண்டு. மக்களை அரசியல்படுத்தி, அமைப்பாக்கி போர்க்குணம் மிக்கவர்களாக வளர்த்தெடுக்கக்கூடிய அரசியல் இன்றைக்கு இந்தியாவில் மாவோயிஸ்ட் அரசியல் என அழைக்கப்படுகிறது. இந்த இரண்டாவது வகை அரசியலை நுட்பமாகப் பேசுகிற,  விவாதிக்கிற களமாகத்தான் விடுதலை பாகம் 2 அமைந்துள்ளது.

தமிழ் சூழலுக்கு ஏற்ப தமிழ்த் தேசிய இன விடுதலைக்கான அரசியலை முன்னெடுத்த போராளிகளைக் கருப்பொருளாகக் கொண்டு இந்த திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. வசனங்களை மிகச்சிறப்பாக அமைத்திருக்கிறார். இடதுசாரி அரசியல் என்பது கம்யூனிஸ்ட் கட்சிகளையும் தாண்டி அம்பேத்கர் அரசியலாக, பெரியார் அரசியலாக இருக்க வேண்டும். `தத்துவம் இல்லா தலைவர்கள் ரசிகர்களைதான் உருவாக்க முடியும். போராளிகளை உருவாக்க முடியாது.’ என படத்தில் ஒரு வசனம் வருகிறது. வெற்றிமாறன் இந்த வசனத்தை யாரையும் மனதில் வைத்து சொல்லவில்லை.  இது வெறும் பொழுதுபோக்குத் திரைப்படம் அல்ல.  இளம் தலைமுறையினரை அரசியல்படுத்த வேண்டும் என்கிற வேட்கையோடு வெற்றிமாறன் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்.” என்றார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/MadrasNallaMadras

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.