வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 20ம் தேதி வெளியான திரைப்படம் விடுதலை பாகம் 2.
இந்தத் திரைப்படம் இடது சாரி அரசியல் குறித்து ஆழமாகப் பேசியிருக்கிறது. பல உண்மை சம்பவங்களின் சாயலில் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
விடுதலை 2 (Viduthalai 2) திரைப்படம் சமூகத்தில் அரசியல் விவாதங்களை எழுப்பியிருக்கும் சூழலில் அரசியல் தலைவர்களும் திரையுலகினரும் அந்தத் திரைப்படத்தைப் பாராட்டி வருகின்றனர்.
அந்தவகையில் நடிகர் தனுஷ் விடுதலை 2 குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தனுஷின் பதிவில், “விடுதலை 2 ராவான (Raw) பிடிப்புடன் ஈர்க்கக்கூடிய திரைப்படமாக உள்ளது. முதல் ஷாட் முதல் கடைசி ஷாட் வரை படத்துடன் ஒன்றியிருந்தேன். தலைசிறந்த படைப்பாளர் (Master Maker) வெற்றிமாறனின் மிகச்சிறந்த வேலைப்பாடு. இளையராஜா சாரின் இசையை ரசித்தேன். அனைத்து நடிகர்களும் தொழில்நுட்பக் குழுவினரும் தங்களது வேலையை சிறப்பாக செய்திருக்கின்றனர். ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவு அற்புதமாக இருந்தது. மிகுந்த ஆர்வத்துடனும் அன்புடனும் இந்தப் படத்தைத் தயாரித்ததற்காகப் எல்ரெட் குமாருக்கு வாழ்த்துகள். படக்குழுவினருக்கு என் அன்பைப் பகிர்கிறேன்.” எனக் குறிப்பிடிருந்தார்.
தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணை ரசிகர்களிடம் மிகுந்த ஆராவரத்தை எழுப்பிய கூட்டணி. பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், வட சென்னை என இவர்கள் இருவரும் இணைந்து மிகச் சிறந்த படங்களைக் கொடுத்திருக்கின்றனர். நீண்ட நாட்களாக ரசிகர்கள் வட சென்னை 2 திரைப்படம் குறித்து தங்களது ஆர்வத்தை எழுப்பி வந்தது குறிப்பிடத்தக்கது.