புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்பேத் கர் பற்றி கூறிய கருத்து சர்ச்சையானது. அவரது பேச்சை எதிர்க்கட்சியினர் கண்டித்து வருகின்றனர். அதேநேரத்தில், அமித் ஷா கருத்துக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) தலைவர்கள்கள் ஆதரவாக பேசி வரு கின்றனர். மேலும், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் அமைதி காக்கிறார். இதனால் அவர் மீண்டும் கூட்டணி மாறுவாரா என்ற கருத்து எழுந்துள்ளது.
பிஹாரில் என்டிஏ தலைமை கட்சியாக ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) உள்ளது. இதன் தலைவர் நிதிஷ்குமார் முதல்வராகவும் இருக்கிறார். இங்கு ஜேடியுவை விட அதிக தொகுதிகள் பெற்றும் பாஜக துணை முதல்வர் பதவியில் மட்டுமே உள்ளது. இதேபோல் மகாராஷ்டிராவிலும் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக இருந்தார். சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகள் பெற்றதால், அக்கட்சியை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல்வரானார். ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வரானார்.
இந்நிலையில், அடுத்த ஆண்டு அக்டோபரில் பிஹார் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில், பாஜக தனித்து நிற்கும் எனவும், முதல்வர் நிதிஷ் ஒதுக்கப்பட்டு விடுவார் என்றும் பல்வேறு பேச்சுக்கள் உலவுகின்றன. இதன் காரணமாகவே, அமைச்சர் அமித் ஷா அம்பேத் கர் பற்றி கூறிய கருத்து தொடர்பாக முதல்வர் நிதிஷ்குமார் மவுனம் சாதிப்பதாக கூறப்படுகிறது. இத்துடன், முதல்வர் நிதிஷ்குமார், மீண்டும் என்டிஏவை விட்டு லாலுவின் மெகா கூட்டணிக்கு செல்லும் வாய்ப்புகள் இருப்பதாகவும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் ஜேடியு நிர்வாகிகள் கூறும்போது, “பாஜக, ஜேடியு மற்றும் லாலுவின் ஆர்ஜேடி என முக்கோண அரசியல் பிஹாரில் உள்ளது. இந்த மூன்றில் ஒன்று சேரும் இரு கட்சிகளே ஆட்சி அமைக்கும் நிலை உள்ளது. எனவே, மகாராஷ்டிராவை போல், பிஹாரில் பாஜக முடிவு எடுக்க முடியாது. தனது உடல்நிலை காரணமாகவே நிதிஷ் அமைதி காக்கிறாரே தவிர கூட்டணி மாறும் பேச்சுகள் அனைத்தும் புரளியே” என்றனர்.
இதனிடையே, உடல்நல குறைவு காரணமாக ஒத்திவைத்திருந்த பிரகதி யாத்திரையை முதல்வர் நிதிஷ்குமார் நேற்று தொடங்கினார். இந்த யாத்திரையின் போது நிதிஷ் ஏதாவது பேசினால்தான், அவர் தொடர்பான சர்ச்சைக்கு முடிவு தெரியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.