புதுடெல்லி: கடந்த வாரம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவடைந்தது. இதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கர் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையானது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்வினையாற்றி இருந்தன. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி தரப்பில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்று பகிரப்பட்டது. அதில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கேஜ்ரிவாலை அம்பேத்கர் ஆசிர்வதிப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவரைப் பற்றி தவறாகப் பேசியவர்களை எதிர்த்துப் போராட கேஜ்ரிவால் பலம் தேடுவது போல அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலடி தரும் வகையில் டெல்லி மாநில பாஜக தரப்பிலும் ஏஐ வீடியோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. அதில் தலித் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என்ற பெயரில் கேஜ்ரிவாலும், டெல்லி முதல்வர் ஆதிஷியும் இணைந்து மக்களை எப்படி ஏமாற்றினார்கள் என்பதை ஏஐ வீடியோ மூலம் தெரிவித்துள்ளது. மற்றொரு வீடியோவில் கேஜ்ரிவாலின் செயல்பாட்டுக்காக அவரது கன்னத்தில் அம்பேத்கர் அறைவது போன்ற வீடியோவும் இடம்பெற்றுள்ளது.
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், களத்தில் பிரதான கட்சிகளாக உள்ள ஆம் ஆத்மி மற்றும் பாஜக தரப்பில் சமூக வலைத்தளங்களில் ஏஐ கொண்டு உருவாக்கப்பட்ட கன்டென்ட்கள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.