மக்களிடம் அதிருப்தியோ, எந்தவிதமான எதிர்ப்பும் இல்லாத வகையில், எம்ஜிஆருக்குப் பின் பெண்களின் அமோக ஆதரவைப் பெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் என கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் அமைச்சர் சி.வெ.கணேசன் பேசினார்.
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வசந்தம் கார்த்திக்கேயன் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் நடைபெற்ற வீரர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி அமைச்சர் சி.வெ.கணேசன் பேசுகையில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
இத்திட்டம் இந்தியாவை தாண்டி வெளிநாடுகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மகளிர் உரிமைத் தொகை வழங்கி மகளிர் கரங்களில் கையிருப்பை உறுதிபடுத்தியுள்ளார். அவர்களுக்கான விடியல் பயணத்தையும் செயல்படுத்தி மக்களின் ஏகோபித்த ஆதரவோடு சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார்.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்குப் பின் பெண்களின் ஆதரவைப் பெற்றுள்ள முதல்வர் நமது மு.க.ஸ்டாலின் தான். மக்களின் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதால் தான் மக்களவைத் தேர்தலில் வரலாற்று வெற்றியை பெற்றோம். மக்களவைத் தேர்தலில் நாம் பிரச்சாரத்திற்கு சென்றபோது, மக்களிடம் இருந்து எவ்வித எதிர்ப்போ, அதிருப்தியோ எழவில்லை. அந்த அளவுக்கு சிறப்பான ஆட்சியை மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். எனவே வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் 200 தொகுதிகளை இலக்கு வைத்து வெற்றிபெறவேண்டும்” என்றார்.
இக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி எம்பி மலையரசன், உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ மணிக்கண்ணன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் புவனேஸ்வரி பெருமாள், ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், அண்ணாதுரை, ஒன்றியக் குழுத் தலைவர் திலகவதி நாகராஜன், தாமோதரன், சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.