சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து குல்தீப் யாதவ் நீக்கம்? அதுவும் இந்த காரணத்திற்காக?

இந்திய அணியில் கடந்த சில ஆண்டுகளாக குல்தீப் யாதவ் இடம் பிடித்து வருகிறார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணியில் முக்கியமான வீரராக உள்ளார். அக்டோபர் மாதம் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி இருந்தார் குல்தீப் யாதவ். முதல் டெஸ்டில் 3 விக்கெட் மட்டுமே எடுக்க முடிந்ததால், அடுத்த 2 டெஸ்டில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார். தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் குல்தீப் யாதவ் இடம்பெறவில்லை. ஆஸ்திரேலியா மண் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தான் சாதகமாக இருக்கும் என்பதால் குல்தீப் யாதவ் அணியில் இடம்பெறவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

2023 ஒருநாள் உலகக் கோப்பையில் 11 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். 2024 டி20 உலகக் கோப்பையில் 5 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை எடுத்து இருந்தார் குல்தீப் யாதவ். அதன்பிறகு கடந்த மாதம் ஜெர்மனியில் இடுப்பில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார். தற்போது முழு ஓய்வில் இருக்கும் குல்தீப் மீண்டும் எப்போது கிரிக்கெட் விளையாடுவார் என்பது குறித்த அறிவிப்பை பிசிசிஐ இன்னும் வெளியிடப்படவில்லை. எனவே குல்தீப் யாதவ் மீண்டும் அணியில் இடம்பெற நீண்ட நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. இதனால் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் 2025 தொடரில் அவர் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடங்கும் முன்பு இங்கிலாந்துக்கு எதிராக இந்திய மண்ணில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது இந்திய அணி. அதில் இடம் பெரும் வீரர்கள் தான் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இடம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. “அறுவை சிகிச்சைக்கு பிறகு குல்தீப் இன்னும் பந்துவீச்சைத் தொடங்கவில்லை. எனவே நீண்ட பயிற்சி தேவை. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் குல்தீப் யாதவ் இடம் பெறுவது சந்தேகம் தான். இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளது. எனவே சாம்பியன்ஸ் டிராபியை பொறுத்தவரை, நேரடியாக அணியில் இடம் பெற வாய்ப்பில்லை. மீண்டும் அணியில் இடம் பெற அதிக நேரம் எடுக்கலாம்”என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குல்தீப் யாதவ் காயம் குறித்து அவரது குழந்தை பருவ பயிற்சியாளர் கபில் பாண்டே கூறுகையில், “குல்தீப் மீண்டும் பந்துவீச தொடங்குவார் என்று நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். அடுத்த வாரத்தில் அவர் கான்பூருக்கு வந்துவிடுவார். நாங்கள் காயத்தில் இருந்து மீண்டு வர சில திட்டங்களை வைத்துள்ளோம். அது வெற்றிகரமாக நடந்தால் அவரை இந்திய அணியில் விரைவில் பார்ப்பீர்கள். குல்தீப் சிறப்பாக பந்துவீச கூடிய திறமை கொண்டவர். ஒரு சில பயிற்சி ஆட்டங்களில் விளையாடினால் மீண்டும் பழைய பார்மிற்கு திரும்பிவிடுவார். பவுலிங் அவருக்கு ஒரு பிரச்சனையாக இருக்காது, ஆனால் அவரது உடல் எப்படி ஒத்துழைக்கிறது என்பதை பார்க்க வேண்டும். அவரது ரன்-அப்பில் எவ்வளவு வசதியாக இருக்கிறார் என்பது முக்கியம். எனவே இங்கிலாந்து தொடரில் அவர் இடம் பெற்றாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன்” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.