புதுச்சேரி: கடும் எதிர்ப்புக்கு இடையில் புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம் இன்று அமலானது. புதுவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியானது. பஸ் கட்டண உயர்வுக்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உயர்த்தப்பட்ட கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
புதுவை சாலை போக்குவரத்து கழகம் புதிய பஸ் கட்டண விபரத்தை அறிவித்துள்ளது. இதன்படி புதுவையிலிருந்து சென்னைக்கு கிழக்கு கடற்கரை வழியாக செல்ல ரூ.155-ல் இருந்து ரூ.160, காரைக்காலுக்கு ரூ.125-ல் இருந்து ரூ.130, வேளாங்கண்ணிக்கு ரூ.160-ல் இருந்து ரூ.170, நாகப்பட்டினம் செல்ல ரூ.145-ல் இருந்து ரூ.160 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காரைக்காலிருந்து சென்னைக்கு ரூ.275, கோவைக்கு ரூ.345-ல் இருந்து ரூ.360 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதுவையிலிருந்து திருப்பதிக்கு ரூ.265-ல் இருந்து ரூ.275, பெங்களூருவுக்கு ரூ.430-ல் இருந்து ரூ.440, ஓசூரிலிருந்து புதுவைக்கு ரூ.250-ல் இருந்து ரூ.255, புதுவையிலிருந்து மாகேவுக்கு ரூ.725-ல் இருந்து ரூ.740, கோழிக்கோடுவுக்கு ரூ.645-ல் இருந்து ரூ.660, குமுளிக்கு ரூ.420-ல் இருந்து ரூ.430, கம்பத்துக்கு ரூ.390-ல் இருந்து ரூ.400, தேனிக்கு ரூ.360-ல் இருந்து ரூ.370, நாகர்கோவிலுக்கு ரூ.610-ல் இருந்து ரூ.620, திருநெல்வேலிக்கு ரூ.540-ல் இருந்து ரூ.550 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதுவையிலிருந்து விழுப்புரத்துக்கு ரூ.27-ல் இருந்து ரூ.33 ஆகவும், கடலூருக்கு ரூ.20-ல் இருந்து ரூ.22 ஆகவும், திண்டிவனத்துக்கு ரூ.33-ல் இருந்து ரூ.35 ஆகவும் கட்டணம் உயர்ந்துள்ளது.
புதுச்சேரி மாநில அரசு பேருந்துகளின், 6 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டணத்தை உயர்த்தி தற்போது அமலுக்கு வந்துள்ளது. அதன்படி புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் பேருந்துகளுக்கு 5 ரூபாயும், புதுச்சேரியில் இருந்து காரைக்கால் செல்லும் பேருந்துகளுக்கு 10 ரூபாயும், புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் பேருந்துகளுக்கு 2 ரூபாயும், புதுச்சேரி நகரம் மட்டும் புறநகர் பகுதியில் ஓடக்கூடிய உள்ளூர் பேருந்துகளுக்கு 3 ரூபாயும் உயர்த்தப்பட்டு உள்ளது. அதுபோல் டீலக்ஸ் பேருந்துகளான புதுச்சேரியில் இருந்து நாகர்கோவில், மாகி, திருப்பதி, பெங்களூர் செல்லும் பேருந்துகளுக்கு ரூ.10 ரூபாயும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.