பெங்களூரு: பெங்களூருவில் உள்ள ஜிகே விகே லே அவுட்டை சேர்ந்தவர் சாப்ட்வேர் இன்ஜினீயர் விக்ரம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 38 வயதான இவருக்கு கடந்த நவ. 28-ல் செல்போனில் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், டெல்லியில் உள்ள இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார்.
மேலும் உங்களது எண்ணை தவறாக பயன்படுத்தி சட்ட விரோத விளம்பரம், பிரபலங்களுக்கு கொலை மிரட்டல் ஆகியவை விடுக்கப்பட்டுள்ளது. உங்கள் மீது மும்பை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்று கூறியுள்ளார். பலமுறை பேசிய அந்த மோசடி நபர்கள், அவரை டிஜிட்டல் அரெஸ்ட் செய்திருப்பதாக கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து வீடியோ அழைப்பில் பேசிய மர்ம நபர் ‘‘உங்களை கைது செய்ய தனிப்படை போலீஸார் பெங்களூரு விரைந்துள்ளனர்”என பயமுறுத்தியுள்ளார். இதனால் பயந்த விக்ரம் தன்னைக் காப்பாற்றுமாறு கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அடுத்த 7 நாட்களில் மொத்தமாக ரூ.11.8 கோடி பணத்தை பறித்துள்ளனர். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விக்ரம், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.