புதுடெல்லி: சமீபத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த மகாராஷ்டிராவில் வாக்காளர்கள் தன்னிச்சையாக சேர்க்கப்படவுமில்லை, நீக்கப்படவுமில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சந்தேகம் எழுப்பி இருந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளது. மேலும், “மாலை 5 மணி வரை பதிவான வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் இறுதி வாக்குப்பதிவு தரவுகளை ஒப்பிடுவது சரியாக இருக்காது. மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்ட வாக்குப்பதிவு நிலவரத்துக்கும் இரவு 11.45 மணிக்கு வெளியிடப்பட்ட வாக்குப்பதிவு நிலவரத்துக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருப்பது இயல்பானதுதான்.
வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்தில், வாக்காளர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடம் வாக்காளர் எண்ணிக்கை பற்றிய விவரங்களைக் கொடுக்கும் சட்டப்பூர்வ படிவம் 17C இருப்பதால், உண்மையான வாக்காளர் எண்ணிக்கையை மாற்றுவது சாத்தியமில்லை. மகாராஷ்டிர வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் வெளிப்படைத்தன்மையுடன் விதி அடிப்படையிலான செயல்முறை பின்பற்றப்பட்டது. மாநிலத்தில் வாக்காளர்களை நீக்குவதில் முறையற்ற செயல்முறை எதுவும் இல்லை. வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் காங்கிரஸ் பிரதிநிதிகள் பங்கேற்பது உள்ளிட்ட உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டன.
மகாராஷ்டிராவில் உள்ள ஒவ்வொரு தொகுதிக்கும் வாக்காளர்கள் மற்றும் படிவம் 20 தொடர்பான அனைத்துத் தரவுகளும், CEO மகாராஷ்டிராவின் இணையதளத்தில் உள்ளன. அவற்றைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுணுக்கமான, வெளிப்படையான செயல்முறைகளை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஒத்துழைப்பதன் முக்கியத்துவத்தை இந்திய தேர்தல் ஆணையம் கருத்தில் கொண்டு செயல்பட்டுள்ளது. மேலும், ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வரவேற்றது” என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.