அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை: "திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை" – ராமதாஸ்

சென்னை அண்ணா பல்கலைக்கழகக்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், பா.ம.க நிறுவனர் ராமதாஸ், தி.மு.க அரசின் சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தை விமர்சித்துக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் ராமதாஸ், “சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரை இரண்டு பேர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. சென்னையின் மையப்பகுதியில் உள்ள உலகப்புகழ் பெற்ற அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே இப்படி ஒரு கொடுமை நிகழ்ந்திருப்பது கண்டிக்கத்தக்கது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகம்

தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு நிலைமை எந்த அளவுக்கு மோசமடைந்திருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வுதான் கொடூரமான எடுத்துக்காட்டு ஆகும். அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவிகள் படிக்கின்றனர். அனைத்து நுழைவு வாயில்களிலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அரசு கூறிக் கொள்கிறது. அது உண்மை என்றால், அனைத்து காவலையும் மீறி மனித மிருகங்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து ஒரு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது எப்படி?

தமிழகத்தையும், பிற மாநிலங்களையும் சேர்ந்த பெற்றோர்கள் அண்ணா பல்கலைக்கழகம் மிகவும் பாதுகாப்பானது என்ற நம்பிக்கையில் தான் தங்களின் குழந்தைகளைப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்புகிறார்கள். ஆனால், பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு இல்லை, மாணவிகளே பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர் என்றால் இனி எந்தப் பெற்றோர் தங்களின் மகள்களை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவார்கள்.

இது பெண் கல்விக்குப் பெருந்தடையாக மாறி விடாதா? தி.மு.க ஆட்சியில் எங்கும், யாருக்கும் பாதுகாப்பு இல்லை. மருத்துவமனைக்குள் நுழைந்து மருத்துவரை சரமாரியாக வெட்டியது, பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியையைக் கொடூரமாக வெட்டி படுகொலை செய்தது, நீதிமன்றத்திற்குள் நுழைந்து விசாரணைக்கு வந்தவரைப் படுகொலை செய்தது என கொடூர நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு நிகழ்வின் போதும் அதற்கு ஏதேனும் காரணத்தைக் கூறி சிக்கலைத் திசை திருப்புவதற்குத் தான் தி.மு.க அரசு முயல்கிறதே தவிர, சட்டம் – ஒழுங்கை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ராமதாஸ் , ஸ்டாலின்

கொலை – கொள்ளை நிகழ்வுகளில் ஈடுபடுபவர்கள், தி.மு.க-வுக்கு ஆதரவாக இருந்து கொண்டு தெரிந்தே குற்றங்களைச் செய்பவர்கள் போன்றோர்தான் பாதுகாப்பாக நடமாட முடிகிறதே தவிர, அப்பாவிகளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. தமிழ்நாட்டில் நடப்பவை அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். சரியான நேரத்தில் தக்க தண்டனையை தி.மு.க அரசுக்கு மக்கள் அளிப்பார்கள்.” என்று பதிவிட்டிருக்கிறார்

VIKATAN PLAY – EXCLUSIVE AUDIO STORIES

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/PorattangalinKathai



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.