ஹைதராபாத்: புஷ்பா 2 சிறப்பு காட்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த வழக்கில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனிடம் ஹைதராபாத் போலீஸார் செவ்வாய்க்கிழமை சுமார் நான்கு மணிநேரம் விசாரணை நடத்தினர். முன்னதாக, இன்று விசாரணைக்கு ஆஜராகும் படி அவருக்கு போலீஸார் திங்கள்கிழமை சம்மன் அனுப்பியிருந்தனர்.
விசாரணைக்கு ஆஜராக நடிகர் அல்லு அர்ஜுன் முற்பகல் 11 மணியளவில் சிக்கடபள்ளி காவல் நிலையத்துக்கு வந்தார். அவருடன், அவரது தந்தையும், தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த் மற்றும் வழக்கறிஞர்கள் சென்றனர். நடிகர் அல்லு அர்ஜுனிடம், துணை காவல் ஆணையர் (மத்திய மண்டலம்) அக்ஷன் யாதவ் தலைமையிலான போலீஸார் மதியம் 2.45 மணி வரை விசாரணை நடத்தினர்.
நடிகர் அல்லு அர்ஜுனிடம் போலீஸார், “பிரிமீயருக்கு வர போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது உங்களுக்குத் தெரியுமா? காவல் துறை அனுமதி தராத நிலையில் சிறப்பு திரையிடலுக்கு யாருடைய அழைப்பின் பேரில் நீங்கள் அங்கு சென்றீர்கள்? வெளியே கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று எந்த காவல் துறை அதிகாரியாவது உங்களிடம் தெரிவித்தாரா? பெண் ஒருவர் உயிரிழந்தது உங்களுக்கு எப்போது தெரியும்?” என்பன உள்ளிட்ட கேள்விகளைக் கேட்டனர் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அனைத்து கேள்விகளுக்கும் அல்லு அர்ஜுன் பதில் அளித்ததாகவும், பெண் உயிரிழந்த விவகாரம் அடுத்த நாள்தான் தெரியும் என நடிகர் கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
நடந்தது என்ன? – அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ள படம் ‘புஷ்பா 2’. சுகுமார் இயக்கியுள்ள இந்தப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் பான் இந்தியா படமாக கடந்த 5-ம் தேதி வெளியானது. வசூல் ரீதியாக இந்தப் படம் சாதனை படைத்துள்ளது. இந்தப் படத்துக்கு தெலங்கானா அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்திருந்தது. அதன்படி கடந்த 4-ம் தேதி இரவு ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் நடந்த சிறப்புக் காட்சியைப் பார்க்கச் சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவருடைய மகன் தேஜ் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். நடிகர் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்ததால்தான் நெரிசல் ஏற்பட்டது என்பதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக டிசம்பர் 13-ம் தேதி அல்லு அர்ஜுனை போலீஸார் கைது செய்தனர். என்றாலும் அன்றைய தினமே தெலங்கானா உயர் நீதிமன்றம் அவருக்கு நான்கு வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. டிசம்பர் 14ம் தேதி காலையில் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளிப்பதாக அல்லு அர்ஜுன் அறிவித்தார். புஷ்பா 2 தயாரிப்பாளர் ரூ.50 லட்சம் நிதியுதவி அறிவித்தார்.
இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை உஸ்மானியா பல்கலை. மாணவர்கள் எனக் கூறிக்கொண்ட குழு ஒன்று பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி அளிக்க வேண்டும் என்று கோரி நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டைத் தாக்கியது. தக்காளி வீசி, பூந்தொட்டிகளை உடைத்து சொத்துகளைச் சேதப்படுத்தியது. இதுதொடர்பாக 6 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் அனைவருக்கும் ஹைதராபாத் நீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் வழங்கியது.