புதுடெல்லி: மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது குறித்து மறு ஆய்வு செய்யுமாறு ஜிஎஸ்ஐ-க்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மேலூர் அருகேயுள்ள தெற்குத் தெரு, முத்துவேல்பட்டி பகுதிகளில் டங்ஸ்டனுக்கான புவியியல் குறிப்பாணை (ஜிஎஸ்ஐ) 2021 செப். 14-ல் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. அதேநேரத்தில், டங்ஸ்டன் போன்ற முக்கிய கனிமங்களை ஏலம்விட மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
பின்னர், கனிமங்கள் சட்டத்தில் சேர்க்கப்பட்ட பிரிவின்படி, முக்கிய கனிமங்கள் தொடர்பான சுரங்க குத்தகைகளையும், கூட்டுஉரிமங்களையும் பிரத்தியேகமாக ஏலம் விட மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில், நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதி உட்பட முக்கிய கனிம தொகுதிகளை ஏலம் விடுவது குறித்து தமிழக அரசுக்கு சுரங்க அமைச்சகம் 15.9.2023-ல் கடிதம் எழுதியது. இதற்கு பதிலளித்த தமிழக நீர்வளத் துறை அமைச்சர், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட திருத்தச் சட்டத்தை கேள்விக்குள்ளாக்கியதுடன், முக்கிய கனிமங்களை ஏலம் விடும் அதிகாரம் மாநில அரசிடம் இருக்க வேண்டும் என்றார்.
2021-2023-ல் முக்கிய கனிமங்களை ஏலம் விடும் அதிகாரம் அரசுக்கு இருந்தபோது, தமிழ்நாடு எதுவும் செய்யவில்லை. குறிப்பாக, ஏல நடைமுறை அமலுக்கு வந்த பிறகு, கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்தில் ஒரு பெரிய கனிமத்தொகுதிகூட ஏலம் விடப்படவில்லை. நிலச் சட்டத்தின்படி மத்திய அரசு முக்கிய கனிமங்களை ஏலம் விடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தமிழக அமைச்சருக்கு பதில் அளித்த பின்னர், சுரங்க அமைச்சகத்தின் செயலாளர், தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு 6-12-2023-ல் நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதி உட்பட ஏலத்துக்கு விடப்படவுள்ள 3 முக்கியமான கனிமத் தொகுதிகளின் விவரங்களை கடிதம் மூலம் கோரினார்.
தமிழ்நாடு புவியியல், சுரங்கத் துறை ஆணையர் 8.2.2024 தேதியிட்ட கடிதத்தில், நாயக்கர்பட்டி தொகுதி உட்பட இந்த மூன்று பகுதிகள் குறித்த விவரங்களை அளித்துள்ளார். எனினும், 193.215 ஹெக்டேர் பரப்பளவில் (கனிமத் தொகுதியின் மொத்த பரப்பளவில் சுமார் 10%) பல்லுயிர் தளம் இருப்பதாக மாநில அரசு தெரிவித்தாலும், இந்த கனிமத் தொகுதியை ஏலம் விடுவதற்கு எதிராகப் பரிந்துரைக்கவில்லை. 2024 பிப்ரவரி முதல் 2024 நவம்பர் வரை சுரங்க அமைச்சகத்தின் ஏலம் தொடர்பான கூட்டங்களில் தமிழகம் கலந்துகொண்ட போதிலும், ஏலம் குறித்து எந்த எதிர்ப்பும், கவலையும் தெரிவிக்கவில்லை.
முக்கிய கனிமங்களை ஏலம் விடுவது மட்டுமே சுரங்க அமைச்சகத்தின் பணியாகும். அதன்பிறகு, விருப்பக் கடிதம் வழங்குதல், கூட்டு உரிமம், சுரங்கக் குத்தகை ஆகியவை மாநில அரசால் மேற்கொள்ளப்படுகின்றன. தேவைப்பட்டால், கூட்டு உரிமம் அல்லது சுரங்கக் குத்தகை கையெழுத்திடுவதற்கு முன்பு பகுதியை மாற்றியமைக்கலாம். உற்பத்தி தொடங்கியவுடன், அனைத்து வருவாயும் மாநில அரசுக்குச் சேரும்.
எனினும், ஏலதாரர் அறிவிக்கப்பட்ட பிறகு, வட்டாரப் பகுதிக்குள் ஒரு பல்லுயிர் பாரம்பரியத் தளம் இருப்பதைக் காரணம் காட்டி, இந்த கனிமத் தொகுதியை ஏலம் விடுவதற்கு எதிராக பல முறையீடுகள் பெறப்பட்டுள்ளன. எனவே, கனிமத் தொகுதியை மறு ஆய்வு செய்து, பல்லுயிர் பெருக்க தளப் பகுதியை தொகுதியிலிருந்து விலக்கி, தொகுதி எல்லையை மறுவரையறை செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு ஜிஎஸ்ஐ கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதியில் ஒப்பந்தப்புள்ளி கோரும் ஒப்பந்ததாரருக்கு ஒப்புதல் கடிதம் வழங்கும் நடைமுறையை தற்போதைக்கு நிறுத்தி வைக்குமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.