புதுடெல்லி: டெல்லியில் சங்கம் விஹார் பகுதியைச் சேர்ந்த சென்டு சேக் என்ற ராஜா கடந்த 21-ம் தேதி கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக வங்கதேசத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வங்கதேசத்திலிருந்து போலி ஆவணங்களை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குள் நுழைந்து டெல்லியில் சங்கம் விஹார் பகுதியில் கடந்த ஓராண்டாக வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவர்கள் உண்மையில் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள்தான் என்பதற்கு அடையாளமாக சிப் அடிப்படையிலான தேசிய அடையாள அட்டை மற்றும் பிறப்பு சான்றிதழை அவர்கள் ஒப்படைத்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், இறந்தவரின் வீட்டை சோதனையிட்டதில் போலியான 21 ஆதார் கார்டுகள், 4 வாக்காளர் அடையாள அட்டை, 8 பான் கார்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. மேலும், வங்கதேசத்தவர்கள் இந்தியாவில் குடியேற இதுபோன்ற போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்ததாக 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் இதுபோன்ற சட்டவிரோத குடியேற்றத்துக்கான ஆவணங்கள், தற்காலிக சிம் கார்டுகள், பயணத்துக்கான பணஉதவியை வழங்கியது தெரியவந்தது. போலி ஆவணங்களை தயாரிக்க உதவிய 6 லேப்டாப், 6 மொபைல்போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.