வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டு இன்றுடன் (டிச.26) 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்படாதது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது 2022 டிச. 26-ம்.தேதி தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும், ஓய்வுபெற்ற நீதிபதி சத்திய நாராயணன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் விசாரித்தது. 220-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை செய்த சிபிசிஐடி போலீஸார், 5 சிறுவர்கள் உட்பட 31 பேரை டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்தினர். அதில், ஒரு காவலர் உட்பட 5 பேரை குரல் மாதிரி சோதனைக்கு உட்படுத்தினர். 10 பேரை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த அனுமதி கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இதனிடையே, வேங்கைவயலுக்குள் அத்துமீறி சென்று மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சேதப்படுத்தியது, தொடர் போராட்டங்கள் காரணமாக வெளியூர் ஆட்கள் வேங்கைவயலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதற்காக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து ஊரை சுற்றிலும் 7 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தலா 2 போலீஸார் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் நடைபெற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்படாதது வேங்கைவயல் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதியிடம் கேட்டபோது, ‘‘இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. பலரிடம் டிஎன்ஏ சோதனை செய்தும்கூட செய்தோம். உண்மை குற்றவாளியை கண்றிய வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடும்கூட” என்றார்.
புற அழுத்தம் காரணமா?- கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்த தமிழக அரசு, இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை நல்ல முறையில் நடைபெற்றதாக வாதாடியது. அதேசமயம், வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி போலீஸார் குற்றவாளியை கண்டறியாமல் இருப்பதில் வேறு ஏதாவது புற அழுத்தமும் இருக்குமோ என பலருக்கும் சந்தேகத்தை எழுப்பி உள்ளது. எனினும், விரைவில் குற்றவாளிகள் கண்டறியப்படுவார்கள் என்ற நம்பிக்கையோடு இருப்பதாக வேங்கைவயல் மக்கள் தெரிவித்தனர்.