புதுடெல்லி: ராஜஸ்தானின் அஜ்மீர் நகரில் முஸ்லிம்களின் புகழ்பெற்ற காஜா அஜ்மீர் ஷெரீப் தர்கா உள்ளது. இது மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால், ஒவ்வொரு வருடமும் தர்காவின் உருஸ் விழாவுக்கு பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் புனித பூப்போர்வை அனுப்பி வைப்பது வழக்கம்.
இந்தவகையில் அஜ்மீர் தர்காவில் டிசம்பர் 28-ல் நிகழும் உருஸ் விழாவுக்கு பிரதமர் மோடி சார்பில் புனித பூப்போர்வை அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதை பிரதமர் சார்பில் சிறுபான்மையினர் நல அமைச்சர் கிரண் ரிஜிஜு நேரில் கொண்டு சென்று போர்த்த உள்ளார்.
இந்நிலையில் அஜ்மீர் தர்காவுக்கு பிரதமர் மோடி சார்பில் பூப்போர்வை அனுப் வேண்டாம் என இந்து சேனா அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இந்துத்துவா அமைப்புகளில் இந்து சேனா சார்பில் அஜ்மீர் தர்கா மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதே இதற்கு காரணம். அஜ்மீர் சிவில் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தா கடந்த மாதம் தாக்கல் செய்த மனுவில், “இந்து கோயிலை இடித்துவிட்டு காஜா ஷெரீப் தர்கா கட்டப்பட்டுள்ளதால் இதை கண்டுபிடிக்க தர்காவினுள் களஆய்வு நடத்த வேண்டும்” என்று கோரியிருந்தார். இம்மனு தொடர்பாக மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகம், ராஜஸ்தான் மாநில வஃக்பு வாரியம் உள்ளிட்ட அமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வழக்கு ஜனவரி 24-ல் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
இதனிடையே, மத்திய அரசின் வழிப்பாட்டுத்தலங்கள் பாதுகாப்பு சட்டம் 1991-ஐ ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. கடந்த மாதம் விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், மசூதி-கோயில் விவகாரங்களில் நாட்டின் நீதிமன்றங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என தடை விதித்துள்ளது.
இச்சூழலில் மசூதி – கோயில் மோதல்களுக்கு இனி இடமில்லை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியிருந்தார். இதன் அடிப்படையில் மத்திய அரசுக்கு பல்வேறு முஸ்லிம் தரப்பினர் ஒரு கோரிக்கை வைத்துள்ளனர். இதில், “வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்ற நோட்டீஸுக்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.