கோவை: “பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டு புகார் தெரிவிக்கும் பெண் விவரங்களை வெளியிடக் கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியும் காவல் துறை சரிவர பின்பற்றுவதில்லை” என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
பாஜக தேசிய மகளிரணி தலைவர் மற்றும் கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் நடத்தும் கோவை மக்கள் சேவை மையம் சார்பில் கோவை சிவானந்தாகாலனி ஹோஸ்மின் நகரில் 50 ஏழை, எளிய பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில், வானதி சீனிவாசன் கலந்துகொண்டு பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ”தமிழகம் ஒரு பாதுகாப்பான மாநிலம். அதிலும் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாகவும் உள்ளது. சமீப காலமாக மக்கள் நடமாட்டம் உள்ள பொது இடங்கள், கல்வி நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. குறிப்பிட்ட அந்த பல்கலைகழகத்தில் நடந்த சம்பவம் கண்டிக்கதக்கது. மாநில அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை.
கைது செய்யப்பட்ட நபர் திமுகவை சேர்ந்தவர். துணை முதல்வரை சந்தித்து புகைபடம் எடுக்கும் அளவுக்கு உள்ளவர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் தைரியமாக புகார் சொன்னது வரவேற்தக்கது. பெண்கள் பாதுகாப்பில் திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும். இதுபோன்ற குற்றச் செயலலில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கபட வேண்டும்.
பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட மற்றும் அது தொடர்பான புகார் தெரிவிக்கும் பெண்களின் அடையாளம் வெளியில் தெரியக் கூடாது என நீதிமன்றம் பல முறை அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும் அது தொடர்பான புரிதல் தெளிவு இல்லாமல் காவல் துறையினர் புகார் குறித்த விவரங்களை வெளியில் தெரியும் அளவுக்கு செயல்படுகின்றனர். எதிர்வரும் காலங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் எவ்வாறு புகார் தர முன்வருவார்கள். நடிகர் விஜய் வெளியில் வந்து மக்களோடு களத்தில் இருந்து அரசியல் செய்தால் தான் அது அரசியல்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.