சென்னை: மூத்த அரசியல் தலைவர் இரா.நல்லகண்ணுவின் நூறாவது பிறந்தநாளையொட்டி அவரது இல்லத்துக்கு நேரில் சென்ற நடிகர் சிவகார்த்திகேயன் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு வியாழக்கிழமை (டிச. 26) தனது நூறாவது பிறந்தநாளை கொண்டாடினார். இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி அமைப்பு தின நூற்றாண்டும் இன்று தொடங்குகிறது. இரா.நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், நூறாவது பிறந்தநாளை கொண்டாடும் இரா.நல்லகண்ணுவை நடிகர் சிவகார்த்திகேயன் அவரது இல்லத்துக்கு நேரில் சென்று வாழ்த்தினார். நல்லகண்ணுவின் கைகளை பற்றிக் கொண்டு தான் நெகிழ்ச்சியுடன் பேசும் புகைப்படங்களை சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ‘இன்று நூறாவது பிறந்தநாள் கொண்டாடும் விடுதலைப்போராட்ட வீரர், ஈடுஇணையற்ற மக்கள் தலைவர் பெருமதிப்பிற்குரிய தநல்லகண்ணு ஐயா அவர்களை நேரில் சந்தித்து எனது அன்பையும் வணக்கங்களையும் தெரிவித்ததில் பெரும் மகிழ்ச்சி’ என்று குறிப்பிட்டுள்ளார்.
வியாழக்கிழமை நடந்த இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி நூற்றாண்டு தொடக்கவிழாவில் முதல்வர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு நல்லகண்ணு பெயர் சூட்டவும் முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.