உலகத் தரத்தில் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.
வீர பாலகர் தினத்தை ஒட்டி டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் அவர் பேசியதாவது: சீக்கியர்களின் 10-வது குரு கோவிந்த் சிங்கின் இளைய மகன்கள் பாபா சோராவார் சிங் (9), பாபா பதே சிங் (6) ஆகியோர் முகலாய படை வீரர்களால் கடத்தப்பட்டனர். அவர்களை மதம் மாறச் சொல்லி நவாப் வாசிர் கான் நிர்பந்தித்தார். வீரமிக்க இரு சிறுவர்களும் மதம் மாற மறுத்துவிட்டனர். இதன்காரணமாக 1704-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி இரு சிறுவர்களையும் உயிரோடு புதைத்து சமாதி கட்டப்பட்டது.
அவர்களின் நினைவாக கடந்த 2022-ம் ஆண்டு முதல் வீர பாலகர் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இன்றைய தினம் 3-வது வீர பாலகர் தினத்தை கொண்டாடுகிறோம். இதையொட்டி வீரம், புதுமை, அறிவியல், தொழில்நுட்பம், விளையாட்டு, கலைத் துறைகளில் சாதித்த 17 சிறுவர், சிறுமியருக்கு விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன. அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
எல்லாவற்றையும்விட தேசத்தின் நலனே முக்கியமானது. நமது நாட்டின் அனைத்து சிறாரும், இளைஞர்களும் வீர பாலகர்களாக விளங்குகின்றனர். நாட்டுக்காக எதையும் செய்ய அவர்கள் தயாராக உள்ளனர். இந்த ஆண்டு வீர பாலகர் தினம் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது. இப்போது அரசியலமைப்பு சட்டத்தின் 75-வது ஆண்டை கொண்டாடுகிறோம். அதோடு வீர பாலகர் தினத்தையும் கொண்டாடுவது பெருமிதம் அளிக்கிறது.
இந்திய இளைஞர்களின் திறமையை பார்த்து உலகமே வியக்கிறது. ஸ்டார்ட் அப், அறிவியல், தொழில், விளையாட்டு என அனைத்து துறைகளிலும் இந்திய இளைஞர்கள் கோலோச்சி வருகின்றனர். அவர்களின் திறமையால் நாடு அதிவேகமாக முன்னேறி வருகிறது.
மென்பொருள் துறையில் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. இந்த துறையிலும் இந்திய இளைஞர்கள் சாதனை படைத்து வருகின்றனர். எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள இளைஞர்கள் தயாராக இருக்க வேண்டும். வளர்ச்சி வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும்.
இதை கருத்தில் கொண்டு இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் புதிய கல்வி கொள்கை கொண்டு வரப்பட்டு உள்ளது. மாணவ, மாணவியருக்காக நாடு முழுவதும் 10,000-க்கும் மேற்பட்ட அடல் ஆய்வகங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. இதன்மூலம் புதுமை கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.
இளைஞர்களின் உடல் நலனைக் காக்க பிட் இந்தியா, கேலோ இந்தியா உள்ளிட்ட இயக்கங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. ஆரோக்கியமான இளைஞர்களால் மட்டுமே ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க முடியும். ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க சுபோஷித் கிராம பஞ்சாயத்து இயக்கம் இன்றைய தினம் தொடங்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் உலகத் தரத்தில் இருக்க வேண்டும். நமது சாலைகள், ரயில் பாதைகள், விமான நிலையங்கள் சர்வதேச தரத்தில் இருக்க வேண்டும். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் செமி கண்டக்டர், மின்னணு சாதனங்கள், வாகனங்கள் உலகத் தரத்தில் இருக்க வேண்டும். நமது சுற்றுலா தலங்கள், நமது விருந்தோம்பல் உலகத் தரத்துக்கு இணையாக இருக்க வேண்டும். விண்வெளி தொழில்நுட்பத்தில் உலக நாடுகளுக்கு நாம் முன்னோடியாக இருக்க வேண்டும். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், சிறந்ததில் சிறந்ததாக இருக்க வேண்டும்.
உலகத்தின் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் நிர்வாகிகளாக இந்தியர்கள் பதவி வகிக்கின்றனர். உலகம் முழுவதும் இந்திய இளைஞர்கள் தனி முத்திரை பதித்து வருகின்றனர். இந்த நேரத்தில் நமது நாட்டின் முன்னேற்றத்துக்காக இந்திய இளைஞர்கள் அயராது பணியாற்ற வேண்டும். சுயசார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும். வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற லட்சிய கனவை எட்ட இந்திய இளைஞர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
நிர்வாகத் திறன் வாய்ந்த இளைஞர்கள் அரசியலில் கால் பதிக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு அரசியல் பின்னணி இல்லாத ஒரு லட்சம் இளைஞர்களை அரசியலுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரியில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை கொண்டாட உள்ளோம். இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்று உள்ளனர். வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவது குறித்து அவர்களின் கருத்துகள் கேட்டறியப்பட்டு வருகின்றன. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.