சாதி பாகுபாடு காட்டியதாக புகார்: பெங்களூரு ஐஐஎம் இயக்குநர் 7 பேராசிரியர்கள் மீது வழக்கு

பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் (ஐஐஎம்) கல்வி நிறுவனத்தில் சாதிய பாகுபாடு தொடர்பான புகாரில் அதன் இயக்குநர் உட்பட‌ 8 பேராசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடந்த ஜனவரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக பெங்களூரு ஐஐஎம் கல்வி நிறுவனத்துக்கு வந்தார். அப்போது அங்கு பணிபுரியும் பட்டியலின பேராசிரியர் கோபால் தாஸுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட பேராசிரியர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதினார். அவரது புகாரை விசாரிக்குமாறு குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இருந்து கர்நாடக அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனிடையே கர்நாடக சமூக நலத்துறை முதன்மை செயலாளர் மணிவண்ணனுக்கும் பேராசிரியர் கோபால் தாஸ் புகாரை அனுப்பினார்.

இதையடுத்து சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நட‌த்தி, சாதிய பாகுபாடு கடைபிடித்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக அறிக்கை அளித்தனர். இந்த அறிக்கையின்பேரில் மைக்கோ லே அவுட் போலீஸார் ஐஐஎம் பெங்க‌ளூரு கல்வி நிறுவன இயக்குநர் ரிஷிகேஷ் டி கிருஷ்ணன், பேராசிரியர்கள் ஜி.சைனேஷ், தினேஷ் குமார், ஸ்ரீனிவாஸ் பிரக்யா, சேத்தன் சுப்ரமணியன், ஆஷிஷ் மிஸ்ரா, ஸ்ரீலதா ஜொன்னலஹேடா, ராகுல் ஆகிய 8 பேர் மீதும் சாதி அடிப்படையிலான துன்புறுத்தல், பணியிட பாகுபாடு ஆகிய குற்றங்களுக்காக வ‌ழக்குப் பதிவு செய்தனர்.

பட்டியலின பேராசிரியரை சாதிப் பெயரை சொல்லி திட்டியது, மிரட்டியது, அச்சுறுத்தியது ஆகிய காரணங்களுக்காக 8 பேர் மீதும் பட்டியலின பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.