சுனாமி: “பாம்புகளுக்கு நடுவில் பெற்றெடுத்தேன் சுனாமியை.." – பேரலை நினைவுகளை பகிர்ந்த தாய்!

உலகை உலுக்கிய நிகழ்வுகள் என்ற பட்டியலை எடுத்தால் அதில் நிச்சயம் 2004-ம் ஆண்டு வந்த சுனாமி எனும் பேரலைக்கு மிக முக்கிய இடமிருக்கும். உறவுகளையும், நம்பிக்கையையும் இழந்து, இதிலிருந்து எப்போது மீளுவோம் என்ற எதிர்பார்ப்பு எல்லோரின் கண்களையும் நிரம்பியிருந்த நிலையில், மீண்ட அந்த நம்பிக்கைப் பூவுடன் 25 ஆண்டுகளை கடந்து விட்டோம். ஆனாலும் சில காயங்களுக்கு காலமும் மருந்தாவதில்லை என்பதை உணர்த்தியிருக்கிறது இந்த சுனாமி. அதுபோன்ற ஒரு சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டார் நமீதா ராய்.

சுனாமி

இப்போது மேற்கு வங்கத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் தனது இரண்டு மகன்களான சௌரப் மற்றும் சுனாமியுடன் வசித்து வரும் நமீதா ராய், அப்போது அந்தமான் நிக்கோபார் தீவில் வசித்தார்.

அப்போது அவருக்கு வயது 26. 2004 டிசம்பர் 26 அன்று என்ன நடந்தது என்பதை படபடப்புடனும், நடுக்கத்துடனும் பகிர்ந்துகொண்டார். “அப்போது நான் நிறைமாத கர்ப்பிணி. வழக்கம்போல வீட்டில் வேலை செய்துகொண்டிருந்தேன். கடலருகில் வீடு என்பதால் அலையின் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். அன்று, திடீரென மயான அமைதி. காரணம் புரியாமல் வெளியே பார்த்தபோது, கடல் பல மையில்களுக்கு உள்வாங்கியிருந்தது. அடுத்த சில நிமிடங்களில் வானுயர அலைகள் எழும்பி வேகமாக வந்தது. என்ன செய்வதெனத் தெரியாமல், மக்கள் எல்லோரும் அங்கிருந்த மலையின் மேல் ஏறி காட்டினுள் நுழைந்தார்கள்.

அவர்களுடன் நாங்களும் ஏறினோம். அந்த அலைகள் எங்கள் சொத்து, சொந்தம் என எல்லாவற்றையும் விழுங்குவதைக் குலை நடுங்கப் பார்த்தோம். நாங்கள் இருந்தப் பகுதியில் நிறையப் பாம்புகள், ஊர்வன என எங்களை சுற்றியிருந்தது. அதற்கு நடுவில்தான் தங்கினோம். அப்போது திடீரென எனக்கு இடுப்புவலி வந்தது. அங்கு எந்த மருத்துவ உதவியும் கிடையாது. என் கணவர் பலரிடம் உதவி தேடினார். இறுதியில் சிலப் பெண்கள் உதவினார்கள். அங்குதான் குழந்தைப் பெற்றேன். அப்போது எங்களுக்கு உணவு இல்லை, கடலுக்கு பயந்து காட்டை விட்டு வெளியே வர தைரியம் இல்லை. இதற்கிடையில் அதிக ரத்தம் வெளியேறி என் உடல்நிலை மோசமடைந்தது.

நமீதா ராய் மகன் சுனாமியுடன்

எப்படியோ பிறந்த குழந்தைக்கு உணவளித்தேன். அவனுக்குதான் சுனாமி எனப் பெயர் வைத்தேன். மருத்துவமனை செல்ல நாங்கள் 8 மணி நேரம் கப்பலில் பயணம் செய்ய வேண்டிய சூழல் இருந்தது. இப்போது அதை நினைத்தாலும் பயம் வரும். என் கணவர் கொரோனாவில் இறந்துவிட்டார். மூத்த மகன் சௌரப் ஒரு தனியார் கப்பல் நிறுவனத்தில் பணிபுரிகிறார். மகன் சுனாமிக்கு ஒரு கடல்சார் ஆய்வாளர் ஆக வேண்டும் என்பதுதான் அவனின் ஆசை” என்கிறார் அந்த நம்பிக்கைப் பூவுடன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.