புதுடெல்லி: பல துறைகளில் சிறந்து விளங்கும் 17 சிறுவர், சிறுமியர்களுக்கு பிரதமரின் பால புரஸ்கார் விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று வழங்கினார்.
கலை, கலாச்சாரம், வீரதீர செயல், புதுமை கண்டுபிடிப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமூக சேவை, விளையாட்டு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய பிரிவுகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு ஆண்டு தோறும் பிரதமரின் பால புரஸ்கார் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டு 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 7 சிறுவர்கள், 10 சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களில் கேயா கத்கர் என்ற 14 வயது சிறுமி, இயலாமை பற்றிய விழிப்புணர்வு, சம உரிமை ஆகியவற்றை ஊக்குவிக்கும் புத்தகங்களை எழுதி வெளியிட்டார். அந்த புத்தகங்கள் சிறப்பாக விற்பனையாயின. இதற்காக அந்த சிறுமிக்கு பால புரஸ்கார் விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.
அதேபோல் காஷ்மீரைச் சேர்ந்த இளம் பாடகர் அயான் சாஜத் (12) பாடிய பாடல்கள் சமூக ஊடகத்தில் மிகவும் பிரபலம் அடைந்தன. அவருக்கும் பால புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. சம்ஸ்கிருதத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்லோகங்களை மனப்பாடம் செய்து நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்திய 17 வயது சிறுவன் வியாஸ் ஓம் ஜிக்னேஸ்-க்கும் பால புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. இவர் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்.
தண்ணீரில் தத்தளித்த 3 சிறுமிகளை காப்பாற்றிய 9 வது சிறுவன் சவுரவ் குமாரின் வீர தீர செயலை பாராட்டி பால புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. தீ விபத்தில் இருந்து 36 பேரை மீட்ட 17 வயது சிறுவன் லோனா தாபாவுக்கும் விருது வழங்கப்பட்டது. பர்கின்சன் நோயாளிகள் தங்களை கட்டுப்படுத்துவதற்கு பயன்படும் கருவிக்கான தொழில்நுட்பத்தை வழங்கிய சிந்தூரா ராஜாவுக்கும் பால புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. காஷ்மீரில் சைபர் பாதுகாப்பு நிறுவனத்தை உருவாக்கி , ‘ஹேக் ஃப்ரீ இந்தியா’ திட்டத்தை தொடங்கிய 17 வயது சிறுவன் ரிஷீக் குமாருக்கு பால புரஸ்கார் விருது வழங்பகப்பட்டது.
விளையாட்டுத்துறையில் ஜூடோ விளையாட்டு வீரர் ஹெம்பாதி நாக் (9) பால புரஸ்கார் விருதை பெற்றார். இவர் நக்சல் பாதிப்பு பகுதியைச் சேர்ந்தவர். 3 வயதில் செஸ் விளையாட்டு போட்டியில் சிறந்து விளங்கும் அனிஸ் சர்க்கருக்கும் விருது வழங்கப்பட்டது. இவர்களை அனைவரையும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பாராட்டி சான்றிதழ் மற்றும் பதக்கங்களையும் வழங்கினார்.