பி.எம்.டபிள்யூ. கார், காதலிக்கு வீடு பரிசு… ரூ.21 கோடி அரசு நிதி மோசடி – சிக்கிய நபர்

மும்பை,

மராட்டிய அரசில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றுபவர் ஹர்ஷ் குமார் ஷீர்சாகர். மாதம் ரூ.13 ஆயிரம் என்ற அளவில் சம்பளம் வாங்கிய அவர், திடீரென பி.எம்.டபிள்யூ. காரில் வலம் வர தொடங்கியுள்ளார்.

காதலிக்கு 4 பி.எச்.கே. கொண்ட வீடு ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார். அவரை பார்த்த சக பணியாளர்கள் ஆச்சரியமடைந்தனர். இவ்வளவு பணம் திடீரென இவருக்கு எப்படி வந்தது? என தெரியாமல் திகைத்தனர். பி.எம்.டபிள்யூ. கார், பி.எம்.டபிள்யூ. பைக், விமான நிலையத்திற்கு எதிரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 4 பி.எச்.கே. கொண்ட வீடு, வைரங்கள் பதிக்கப்பட்ட கண்ணாடி என சாகர் வசதியை பெருக்கி கொண்டார்.

சாகருடன் கூட்டாக சேர்ந்து கொண்டு இந்த மோசடியில் ஈடுபட்ட சக பணியாளரின் கணவர் ரூ.35 லட்சம் மதிப்பிலான சொகுசு ரக கார் ஒன்றை சமீபத்தில் வாங்கியுள்ளார். இந்நிலையில், சக பணியாளருடன் சேர்ந்து ரூ.21 கோடி அளவுக்கு அரசு நிதியை மோசடி செய்தது, அதில் கிடைத்த தொகையை வைத்து சாகர் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விளையாட்டு வளாகம் பெயரில் வங்கி கணக்கை தொடங்கி, போலி ஆவணங்களை பயன்படுத்தி, துணை இயக்குநரின் போலியான கையெழுத்துகளை போட்டு காசோலைகளை தயாரித்து, மோசடியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த விசயத்தில் சாகருடன், யசோதா ஷெட்டி மற்றும் அவருடைய கணவர் ஜீவன் ஆகியோர் கூட்டாக மோசடிக்கான வேலையில் ஈடுபட்டு உள்ளனர். ஒப்பந்த தொழிலாளர்களான இவர்கள் அரசு நிதியை பின்னர் தங்களுடைய வங்கி கணக்கிற்கு பரிவர்த்தனை செய்து கொண்டனர். இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.