“புத்தகக் கடையோடு சேர்ந்து நானும் வளர்ந்தேன்”- லூயிஸ் மிஷாவ்|ஒரு புத்தகக் கடைக்காரரின் கதை -பகுதி 10

அமெரிக்காவில் கறுப்பர்கள் அடர்த்தியாக வசிக்கும் ஹார்லெம் நகரில், கறுப்பர்களுக்காக கறுப்பர்களால் எழுதப்பட்ட புத்தகங்களைக் கொண்ட கடையை லூயிஸ் மிஷாவ் திறந்தார்.

அடிமைத்தளைக்கு எதிராக கறுப்பர்கள் ஆங்காங்கே தீவிரமாகக் களமாடி வந்த காலம் அது. பொதுவாகவே நாடு முழுவதும் பொருளாதார நெருக்கடி அமெரிக்க குடிமக்களை நெட்டித் தள்ளிய நிலையில், சேரிகளில் உழன்ற கறுப்பர்களின் வாழ்வாதாரம் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. அப்படி இருக்கையில், கறுப்பர்கள் புத்தகங்களை வாங்கிப் படித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பதெல்லாம் வீண் நம்பிக்கைதான். ஆனால், அந்த நம்பிக்கையில் உறுதியாக இருந்தார் லூயிஸ் மிஷாவ். இருந்தாலும், அன்றாட தேவைக்கு இந்தப் புத்தகக் கடையை நம்பியிருக்க முடியாதே. 

புத்தகக்கடை

“நேரடியாகக் கேட்கிறேன். வருமானத்துக்கு என்ன செய்தீர்கள் அப்போது? கடை வாடகையை வேண்டுமானால், உங்கள் அண்ணன் கொடுத்திருக்கலாம்… ஆனால் அன்றாட தேவைகளுக்கு உங்களுக்கு பணம் தேவைப்பட்டிருக்கும் அல்லவா? அப்படி என்ன அந்த புத்தகக் கடையில் விற்றிருக்கப் போகிறது?” தள்ளுவண்டியில் வைத்து கடைத் தெருவில் கூவிக் கூவி புத்தகங்களை விற்ற நிலையில் தினப்பாட்டுக்கு பயங்கரத் திண்டாட்டம் என்பதால், அந்த நினைவுகள் மெல்ல அழுத்த, என்னுடைய கேள்விக்குப் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார் மிஷாவ். புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த மிஷாவைப் பார்க்க மருத்துவமனைக்கு வந்திருந்த ஆலிவ் பேட்ச் பேசத் தொடங்கினார்.

“நான் வேலைக்கு சேர்ந்த பின் இவர் பட்ட கஷ்டங்களை, அந்தத் தெருவில் சாலையோரம் பீடி, சிகரெட் விற்பனை செய்த வியாபாரி ஒருவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்போது ஒரு நாள் இவர் சாப்பிடுவதற்காக ரெஸ்டாரன்ட்டுக்கு போயிருக்கிறார். சாப்பிட்டு விட்டுப் பாக்கெட்டைத் தடவினால், அவரிடம் பணம் இல்லை. வேறு வழியில்லாமல் அந்த ரெஸ்டாரன்ட்டின் ஜன்னல் கண்ணாடிகளை கழுவிச் சுத்தம் செய்து, சாப்பாட்டுக் கட்டணத்தை ஈடுகட்டியிருக்கிறார். அவர் செலுத்த வேண்டிய கட்டணத்தை எடுத்துக்கொண்டு, மீதிக் கூலியை ஹோட்டல் உரிமையாளர் இவரிடம் கொடுத்திருக்கிறார். கஷ்டப்பட்டு வேலை செய்ய அவர் தயங்கியதே இல்லை.”

லூயிஸ் மிஷாவ்

பேட்ச் சொல்வதைக் கேட்டு களிப்புற்ற மிஷாவ் மீண்டும் உற்சாகமடைந்தார்.“ஆமா… பேட்ச் சொல்றது சரிதான். அப்புறம்தான் எனக்கு இன்னொரு விஷயமும் பிடிபட்டது. பெருவிருப்புக்கு புத்தகத் தொழில். வயிற்றுப் பிழைப்புக்கு ஹோட்டல் ஜன்னல் கண்ணாடிகளைக் கழுவும் வேலை செய்யலாம் எனத் தீர்மானித்தேன். நீங்கள் கேட்டது போல அன்றாடத் தேவைகளுக்காக தேவையான பணம் கிடைத்துவிட்டால் அப்புறம் என்ன கவலை? புத்தக விற்பனையில் மும்முரமாக இறங்கினேன். நாடு முழுவதும் உள்ள பதிப்பாளர்களைத் தொடர்புகொண்டு புத்தகங்களைத் தருவித்தேன். வெறுமனே புத்தகங்களோடு மட்டும் நின்றுவிடாமல் கறுப்பினத் தலைவர்களின் போஸ்டர்கள், போட்டோக்களை விற்பனை செய்வது, புதிய புத்தகங்களின் அறிமுகக் கூட்டம் நடத்துவது என என்னோட கடையை எப்போதும் பரபரப்பாக வைத்துக் கொண்டேன். கொஞ்சம் கொஞ்சமாக விற்பனை அதிகரித்து கடை பிரபலமடைந்தது.”

மிஷாவ் சொல்லி நிறுத்தியதும் அவர் விட்ட இடத்திலிருந்து பேட்ச் தொடங்கினார். “அப்போ இரண்டாம் உலகப் போர் உச்சக்கட்டத்தில் இருந்த காலக்கட்டம். போர் முனையில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கு புத்தகங்களை அனுப்பச் சொல்லி உறவினர்கள் எங்களுக்கு பணம் அனுப்பி வைத்தனர். அப்படியும் எங்களுடைய வியாபாரம் அதிகரிச்சது. அடுத்து நாங்க இன்னொரு முயற்சியை எடுத்தோம். நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கு புத்தகங்களின் விலைப்பட்டியலை அனுப்பி ஆர்டர் எடுத்தோம். இந்த முயற்சியும் நல்ல பலனைத் தந்தது.”

லூயிஸ் மிஷாவ்

“எங்க கடையோட வளர்ச்சியின் ஒரு பக்கத்தை மட்டும்தான் பேட்ச் சொல்லி இருக்கிறார். நாம் மேலே ஏறும்போது, காலை இழுத்து இறக்கி விடுபவர்களும் இருக்கத்தானே செய்வார்கள். அப்படி ஒரு சம்பவம் நடந்தது. கடையைத் திறந்த தொடக்க மாதங்களில் வந்த வாடிக்கையாளர் ஒருவர் அடையாளம் தெரிந்து கொண்டு, என்னைக் கண்டுபிடித்துவிட்டார். ‘நீங்க லைட்ஃபுட் சகோதரர்தானே…’ என கேட்கவும், நான் தலையசைத்தேன். ‘என்னங்க நீங்க, கஸ்டமரே வராத புக்ஸ் ஸ்டோர வச்சி என்ன செய்யப்போறீங்க? உங்க அண்ணனோட பிரசங்கத்துக்கு கூடுற கூட்டத்தைப் பாருங்க. போன சண்டே வாஷிங்டன்ல கட்டுக்கடங்காத கூட்டம், இருபத்தைந்தாயிரம் பேர் இருப்பாங்க. அந்தக் கூட்டத்துல வசூலான தொகையை ஒப்பிடும் போது வருசக் கணக்கா நீங்க புக்ஸ் விக்கணும் போலயே..’ என பரிகாசம் செய்தார். ஆனா, இதையெல்லாம் தூசி போல தட்டி விட்டுட்டு நாங்க நடந்தோம். 

“இந்த மாதிரியான பேச்சுக்களை அவ்வப்போது கேட்டாலும் நான் மனம் தளரவில்லை. இன்னும் சொல்லப்போனால், நான் தேவனை பிரார்த்திப்பதையே நிறுத்திவிட்டேன். ஆமாங்க, நான் அனைத்து மதங்களைப் பற்றியும் படித்து, உண்மையான லார்ட் (Lord – கடவுள்) யார் என்பதைக் கண்டுபிடித்து விட்டேன். அது Landlordதான் (கட்டட உரிமையாளர்). வாடகை வசூல் செய்ய, அவர் ஒவ்வொரு மாதமும் என்னைப் பார்க்க வந்துவிடுவார். அதனாலதான் சொல்றேன், பிரார்த்தனைலாம் வேலைக்கு ஆகாதுங்க. கஷ்டப்பட்டு உழைச்சாத்தான் உண்டு. மாசம் முடிஞ்சா வாடகை கொடுக்கணும்ல.

“அப்போ எனக்கு சின்ன மன வருத்தம்தான் இருந்துச்சு 1941-ல மார்ச் மாசம் அம்மா இறந்திட்டாங்க. அம்மா விரும்புன மாதிரியே அண்ணன் தேவ ஊழியம் செய்து நாடு முழுவதும் அறியப்பட்ட பாதிரியாராக பிரபலமாகிட்டாரு. ஆனால் நான்…? அம்மா பெருமைப்படுகிற மாதிரி நானும் ஒரு நாள் பிரபலமாவேன் என மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

லூயிஸ் மிஷாவ்

“பிரபலம் இல்லையென்றாலும் புத்தகக் கடை மூலம் எனக்கு ஒரு திருப்தி ஏற்பட்டது. என்னுடைய சகோதரிகளை கடையில் வேலைக்கு சேர்த்துக் கொண்டேன். என்னோட அப்பா கடை நடத்தும் போது நாங்கள் குடும்பமாக சேர்த்து உழைத்தது போல, புத்தகக் கடையையும் அதே மாதிரி நடத்தி வந்ததை பெருமையாக நினைத்தேன். அப்போ எனக்கு மீன் வாசனை பிடிக்கும், இப்போ புத்தகத் தாள்களின் வாசனை மீன் வாசனையை நினைவுபடுத்துகிறது…”

சொல்லிவிட்டு வாசித்து விரித்த நிலையில் புறமுதுகைக் காட்டிக் கிடந்த புத்தகத்தை எடுத்து முகம் புதைத்து நுகர்ந்து மூச்சை உள்ளிழுத்து சிரித்தார். ஆலிவ் பேட்ச்சும் அந்தப் புத்தகத்தை வாங்கி முகர்ந்தவர், “ஆமா, மீன் வாசனை வருது…” எனச் சொல்லி கலகலப்பூட்டினார்.

“புரஃபசர்… ஓரளவுக்கு கடைக்கு வாசகர்கள் வரத் தொடங்கி விட்டார்கள். இருந்தாலும், கடை பிரபலமாகி விட்டது என்பதை எப்போது உணரத் தொடங்கினீர்கள்?” லூயிஸ் மிஷாவ்வின் உள்ளத்தில் புதைந்து கிடக்கும் தகவல்களை வெளிக் கொண்டு வரும் முயற்சியில் என்னுடைய அடுத்தக் கட்டம் தொடங்கியது.

“எனக்கு அந்த மாதிரி சிந்தனையே ஏற்பட்டதில்லை இவா. அறிவை விசாலமாக்கும் பணியில் எப்போதும் தேங்கி விடக்கூடாது என்பதால், இது போன்ற ‘வெற்றி – முன்னேற்றம்’ போன்ற சிந்தனைகளை மூளைக்குள் ஏற்றிக் கொண்டதில்லை. அதுக்கு காரணம், அடுத்தடுத்து பிரச்சினைகள் ஏற்பட்டதுதான்…”

நான் போட்ட தூண்டிலில் மீன்கள் சிக்கின. “என்ன பிரச்சினை ஏற்பட்டது?”

லூயிஸ் மிஷாவ்

“நான் குடும்பத்தோடு இந்தக் கடையை நடத்தி வருவதைப் பற்றி கேள்விப்பட்ட அண்ணன் அதற்காக சந்தோசப்பட்டதாக அறிந்தேன். கறுப்பர்கள் மத்தியில் அறிவெழுச்சி ஏற்படுத்தி வருவது பற்றி அவருக்கு சின்ன சந்தோசம் ஏற்பட்டிருக்கணும். ஆனால், பாலியல் தொடர்பான புத்தகங்களை விற்பதால் சாத்தானின் பாதையை நான் மீண்டும் தேர்ந்தெடுத்துக் கொண்டதாக அவர் கற்பனை செஞ்சிக்கிட்டு கடைக்கு கொடுத்து வந்த வாடகையை நிறுத்தி விட்டார். பைபிளில் சொல்லப்படாத செக்ஸ் தொடர்பான அம்சங்களா என்னுடைய புத்தகக் கடையில் வித்த புக்குல இருக்கப் போவுது…? வாசகர்களை உள்ளே இழுப்பதற்கான சின்ன உத்தியாகத்தான் அந்த புத்தகங்களை விற்பனை செய்தேன்.”

சற்று நிறுத்தியவர், “நீங்க கேட்டீங்கல்ல, கடை எப்போது பிரபலமாச்சின்னு. அது 1946-வது வருஷம்னு நினைக்கிறேன், அதாவது கடை தொடங்கி ஏழாவது வருஷம். எழுத்தாளர் கார்ட்டர் வுட்ஸன் அனுப்பியதாக ஒருத்தர் வந்தார். சிகாகோ நகரத்திலிருந்து வர்றதா சொன்னாரு, அவரு பேரு இப்ப எனக்கு ஞாபகம் இல்லை.  ஒரு புத்தகக் கடை தொடங்கணும், ஆலோசனை சொல்லுங்கன்னு, எழுத்தாளர் கார்ட்டர் வுட்ஸனிடம் அவர் கேட்டிருக்கார். ‘நான் ஒரு வரலாற்றாய்வாளர், எழுத்தாளர், புத்தகம் விற்பனை செய்பவர் கிடையாது. புத்தக விற்பனை பற்றி தெரிஞ்சுக்கணும்னா நியூயார்க் போங்க, அங்கே ஹார்லெம் சிட்டில மிஷாவ் என்பவரை சந்தித்து பேசுங்க, அவர் உங்களுக்கு ஆலோசனை வழங்குவார்’ அப்படிணு சொன்னதால என்னைப் பார்க்க அவர் வந்திருந்தாரு. எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு. அப்ப நம்ம கடை, எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் மத்தியில பிரபலமானது மட்டுமல்ல, வெற்றிகரமான ஒரு தொழிலாகவும் இது அங்கீகரிக்கப்பட்டிருக்குன்னு எனக்கு பிரமிப்பா இருந்துச்சு…”

எழுத்தாளர் கார்ட்டர்

“ஓஹோ… புத்தக வியாபாரத்தில், அதுவும் கறுப்பர்களைப் பற்றி கறுப்பர்களால் எழுதப்பட்ட புத்தகங்களை விற்பனை செய்வதில் முன்னோடியாக உருவாகி விட்டீர்கள்…” மிஷாவைப் பாராட்டும் விதமாகச் சொன்னதும், அவர் நகைத்தார்.

“புத்தகக் கடையோடு சேர்ந்து நானும் வளர்ந்தேன்…” சொல்லிவிட்டு தன் உயரத்தைச் சுட்டிக்காட்டி, தான் குள்ளமாக இருப்பதை சுயகேலி செய்து கொண்டார். “அப்படித்தான் சொல்லணும், என்னை புரஃபஸர் என அழைக்கவும் அப்போது தொடங்கி விட்டிருந்தார்கள். அப்படி அழைப்பதை நான் தடுக்கவில்லை. 1949 -ம் வருஷம்ணு நினைக்கிறேன். ஆமா, நல்லா நினைவு இருக்கு, கடை தொடங்கி பத்தாவது ஆண்டு அது, ஒரு பத்திரிகையில இருந்து என்னை பேட்டி எடுக்க வந்தாங்க. அதுக்கு என்ன காரணம்ணு சொல்லுங்க பார்ப்போம்…”

மிஷாவ் இப்படி கேட்டதும், அவருடைய நேர்காணல் செய்தித்தாளில் முதன்முதலாக எப்போது வெளிவந்தது என்பதைப் பற்றி ஆய்வு செய்யாமல் வந்து விட்டோமே என என்னை நானே நொந்து கொண்டேன்.

பக்கங்கள் புரளும்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.