மகாராஷ்டிரா மாநிலம், சத்ரபதி சாம்பாஜி நகரைச் சேர்ந்தவர் ஹரீஷ் குமார். இவர் அங்குள்ள ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வந்தார். அவரது சம்பளம் மாதம் ரூ.13 ஆயிரமாகும். இவரும், பெண் ஊழியர் யசோதாவும் நிர்வாகத்தில் இருந்தனர். அவர்கள் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் வங்கிக் கணக்கைக்கூட கையாண்டனர். இதைப் பயன்படுத்தி இருவரும் சேர்ந்து சதி செய்து அரசு பணத்தைக் கையாடல் செய்துள்ளனர். சத்ரபதி சாம்பாஜி நகர் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் பெயரில் போலி வங்கிக் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டது. அந்த வங்கிக் கணக்கில் பண பரிவர்த்தனைக்கு காசோலையில் துணை இயக்குநரின் கையெழுத்து தேவையாக இருந்தது.
இதையடுத்து போலி ஆவணங்களை ஏற்பாடு செய்து வங்கியில் கொடுத்து இருவரும் இண்டர்நெட் பேங்கிங் சேவையை பெற்றனர். இதற்கு யசோதாவின் கணவரும் துணையாக இருந்தார். இண்டர்நெட் பேங்கிங் வசதியை பெற்று பணத்தை தங்களது வங்கிக் கணக்கிற்கு மாற்றினர். மொத்தம் 21.59 கோடியை தங்களது வங்கிக் கணக்கிற்கு மாற்றினர். அந்த பணத்தில் ஹரீஷ் குமார் தனக்கு சொந்தமாக பி.எம்.டபிள்யூ கார், பி.எம்.டபிள்யூ பைக் வாங்கிக்கொண்டார். அதோடு விமான நிலையத்திற்கு அருகில் தனது காதலிக்கு 4 படுக்கை அறைகள் கொண்ட வீடு ஒன்றை வாங்கிக்கொடுத்து சொகுசாக வாழ்க்கை நடத்தி வந்தார்.
அவர்களது மோசடி ஆறு மாதங்களாக சத்ரபதி சாம்பாஜிநகர் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் நிர்வாகத்திற்கு தெரியாமல் இருந்தது. பெண் ஊழியர் யசோதாவின் கணவர் ஜீவன், 35 லட்சத்திற்கு சொந்தமாக கார் வாங்கினார். மோசடி நடந்து ஆறு மாதங்கள் கழித்துதான் ஸ்போர்ட்ஸ் துணை இயக்குநர் தீபக் குல்கர்னி அதனை கண்டுபிடித்தார். இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹரீஷ் குமார் தான் வாங்கிய 1.3 கோடி மதிப்புள்ள மற்றொரு காருடன் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். ஹரீஷ் குமார் தனது காதலிக்கு வாங்கிக்கொடுத்த 4 படுக்கை அரசிகள் கொண்ட வீட்டில் போலீஸார் 4 மணி நேரமாகச் சோதனை நடத்தினர்.
ஆனால் இதில் மோசடி செய்ததற்கு எந்தவித ஆதாரமும் சிக்கவில்லை. யசோதாவும், அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹரீஷ் குமார் பணத்தை மாற்றிய வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. போலீஸாரின் விசாரணையில் ஹரீஷ் குமார் பழைய லட்டர்பேட் ஒன்றை பயன்படுத்தி ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் இமெயில் ஐ.டியை மாற்றும்படி கூறி வங்கிக்கு விண்ணப்பம் கொடுத்துள்ளார். புதிய இமெயில் ஐ.டி.யில் ஒரு எழுத்தை மட்டும் மாற்றி இருக்கிறார். வங்கி நிர்வாகம் இமெயில் ஐ.டி.யை மாற்றிய பிறகு அதனை தானே ஹரீஷ் பயன்படுத்தி வந்துள்ளார்.
கடந்த ஜூலை மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரை தனது வங்கிக் கணக்கு உட்பட 12 வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை டிரான்ஸ்பர் செய்துள்ளார். ஹரீஷ் தனது காதலிக்கு வைரம் பதித்த கண்ணாடி ஒன்றை பிரபல நகைக்கடை ஒன்றில் ஆர்டர் செய்துள்ளார். இந்த மோசடியில் மண்டல விளையாட்டுத்துறை ஊழியர்கள் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர். இதனால் துறை கிளார்க் உட்பட சிலரை அழைத்து பல மணி நேரம் விசாரணை நடத்தினர். மேலும் பலரை அழைத்து விசாரிக்கவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர். அரசு பணத்தை கையாடல் செய்ததில் வங்கி ஊழியர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹரீஷ் வாங்கிய பி.எம்.டபிள்யூ கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.