வட மாநிலங்களில் வாட்டி வதைக்கும் குளிர்.. மக்கள் அவதி

புதுடெல்லி,

வடமாநிலங்களில் குளிர் நடுங்க வைத்து வருகிறது. பல மாநிலங்களில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததால், கிறிஸ்துமஸ் பண்டிகையை எதிர்பார்த்ததற்கு ஏற்ப கொண்டாட முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் வெப்பநிலை, மைனஸ் 7.3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைந்தது. ஆனால், அங்கு பனிப்பொழிவு இல்லாததால், ‘வெள்ளை கிறிஸ்துமஸ்’ பண்டிகையை அனுபவிக்க முடியவில்லை என்று சுற்றுலா பயணிகள் புலம்பினர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் குல்மார்க்கை தவிர, இதர அனைத்து வானிலை மையங்களிலும் இரவு நேர வெப்பநிலை மிகக்குறைவாக பதிவானது. பல்வேறு நீர்நிலைகளும், நீர் வினியோக வழித்தடங்களும் பனியால் உறைந்தன. புகழ்பெற்ற தால் ஏரி, பனிஅடுக்குகளால் மூடப்பட்டிருந்தது. இன்னும் 2 நாட்கள், குறைந்தபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறையும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. இமாசலபிரதேசத்தில் சுற்றுலா தலங்களான தபோ, ஸ்பிடி மாவட்டம் ஆகியவை அதிக குளிர் நிறைந்த பகுதிகளாக உருவெடுத்துள்ளன. தலைநகர் சிம்லாவிலும் குளிர் அதிகமாக இருந்தது. பனிப்பொழிவால், 226 சாலைகள் மூடப்பட்டன.

டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை, 22.4 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 8.4 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவானது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பனியால் சில சாலைகள் மூடப்பட்டிருந்தன. ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் ஆகிய வடமாநிலங்களிலும் குளிர் அதிகமாக இருந்தது. இதனால் மக்கள் அவதிப்பட்டனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.