முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளான நேற்று டெல்லியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் வீட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் என்.சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர்கள் ராம் மோகன் நாயுடு (தெலுங்கு தேசம்), ராஜீவ் ரஞ்சன் சிங் (ஐக்கிய ஜனதா தளம்), எச்.டி.குமாரசாமி (மதசார்பற்ற ஜனதா தளம்), அனுப்ரியா படேல் (அப்னா தளம்-எஸ்), ஜிதன் ராம் மாஞ்சி (ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா), ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா தலைவர் உபேந்திர குஷ்வாகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டம் தொடர்பான நிகழ்ச்சி நிரல் எதுவும் வெளியிடப்படவில்லை. என்றாலும் கூட்டணிக் கட்சிகள் இடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாஜக வட்டாரங்கள் கூறியதாவது: வாஜ்பாய் நிர்வாகத்தின் முக்கிய கருப்பொருளை பிரதிபலிக்கும் சிறந்த நிர்வாகம் மற்றும் அரசியல் உத்திகள் பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. காங்கிரஸ் எழுப்பிய அரசியலமைப்பு சட்ட பிரச்சினைகள் குறித்து அமித்ஷாவும் ஜே.பி.நட்டாவும் விரிவாக பேசினர். காங்கிரஸ் எழுப்பும் பிரச்சினைகளால் கவனச்சிதறலுக்கு ஆளாகாமல் மத்திய அரசின் நேர்மறையான கொள்கைகள் மற்றும் முன்முயற்சிகளை செயல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் அமித்ஷா கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அரசியலமைப்பு தினத்தன்று நடந்தது போன்ற ஆக்கப்பூர்வமான விவாதங்களின் முக்கியத்துவத்தை இந்தக் கூட்டம் வலியுறுத்தியது. ஆக்கப்பூர்வமான நிர்வாகத்துக்கான என்டிஏ.வின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நூற்றாண்டு விழாவையொட்டி வரும் நாட்களில் நடைபெறும் கூட்டங்களில் அவரது சாதனைகளை நினைவுகூர முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.