புதுடெல்லி: கடந்த 2023-24 நிதியாண்டில் பாஜக ரூ.2,244 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது. பிஆர்எஸ் கட்சிக்கு ரூ.580 கோடி கிடைத்த நிலையில், காங்கிரஸுக்கு ரூ.289 கோடி மட்டுமே கிடைத்தது.
அரசியல் கட்சிகள் தாங்கள் பெறும் நன்கொடை பற்றிய விவரங்களை தேர்தல் ஆணையத்தில் ஆண்டுதோறும் தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி, கடந்த 2023-24 நிதியாண்டுக்கான நன்கொடை விவரங்கள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. அதன் விவரம் வருமாறு:
கடந்த 2023-24 நிதியாண்டில் தனி நபர்கள், அறக்கட்டளைகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பாஜக ரூ.2,244 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இவை ரூ.20,000-க்கும் மேல் பெறப்பட்ட நன்கொடை ஆகும். இது முந்தைய 2022-23 நிதியாண்டைப் போல 3 மடங்குக்கும் அதிகம். இதே காலத்தில் மற்றொரு தேசிய கட்சியான காங்கிரஸுக்கு வெறும் ரூ.288.9 கோடி மட்டுமே நன்கொடை கிடைத்துள்ளது. முந்தைய ஆண்டில் இது ரூ.79.9 கோடியாக இருந்தது.
தெலங்கானாவைச் சேர்ந்த கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி கட்சி ரூ.580 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இது காங்கிரஸ் பெற்ற நன்கொடையைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகபட்சமாக புருடென்ட் தேர்தல் அறக்கட்டளை பாஜகவுக்கு ரூ.723.6 கோடியும், காங்கிரஸுக்கு ரூ.156.4 கோடியும் வழங்கி உள்ளது. அதாவது பாஜகவின் ஒட்டுமொத்த நன்கொடையில் 3-ல் ஒரு பங்கும், காங்கிரஸின் நன்கொடையில் 50 சதவீதமும் இந்த அறக்கட்டளையிடமிருந்து கிடைத்துள்ளன.