IND vs AUS : பும்ராவை மிரளவிட்ட 19 வயது ஆஸி பிளேயர்…4,6,4 என விளாசல்

IND vs AUS 4th Test, Sam Konstas | இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி அந்த அணியில் உஷ்மான் கவாஜா மற்றும் சாம் கோன்ஸ்டாஸ் களமிறங்கினர். சாம் கோன்ஸ்டாஸ் 19 வயதில் ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் போட்டிக்காக அறிமுகமாகியுள்ளார். பிக்பாஸ் உள்ளிட்ட டி20 தொடர்களில் அவரின் சிறப்பான பேட்டிங் பெரும் கவனத்தை பெற்ற நிலையில், உடனடியாக டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டார். இதற்கு காரணம், கடந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் பும்ரா பந்துவீச்சை எதிர்கொள்ள ஆஸ்திரேலிய அணியினர் தடுமாறினர்.

அவரை சமாளிக்க அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் இளம் வீரராக இருக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணி பிளான் போட்டது. அதன்படியே சாம் கோன்ஸ்டாஸ் இந்திய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் களம் இறங்கினார். அவருக்கு அறிவுறுத்தியதைப் போலவே ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சை எந்த பயமும் இல்லாமல் எதிர்கொண்டார். குறிப்பாக பும்ரா பந்துவீச்சில் மட்டும் அதிரடி காட்டினார். இதனால் கடந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் துல்லியமாக பந்துவீசிய பும்ரா, இப்போட்டியில் தன்னுடைய லைன் அன்ட் லென்த்தை கட்டாயமாக மாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். 

இருப்பினும் சாம் கோன்ஸ்டாஸ் ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். ஒரே ஓவரில் மட்டும் 4,0,2,6,4,2 என வெளுத்து வாங்கினார். இதனால் பும்ராவே ஒரு நிமிடம் ஆடிப்போனார். ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அரைசதமும் அடித்தார் சாம் கோன்ஸ்டாஸ். அவரின் அதிரடி பேட்டிங்கை இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா முடிவுக்கு கொண்டு வந்தார். எல்பி டபள்யூ என்ற முறையில் அவரை அவுட்டாக்கினார். இந்த டெஸ்ட் போட்டியில் இதுதான் இந்திய அணிக்கு முதல் டெஸ்ட் விக்கெட்டும் கூட.

மேலும் படிக்க | நிதிஷ் குமாருக்கு பதில் தனுஷ் கோட்டியன்? இந்திய அணியின் பிளேயிங் 11 இதுதான்!

அதிரடியாக ஆடிய சாம்கோன்ஸ்டாஸ் 65 பந்துகளில் 60 ரன்கள் விளாசினார். இதில் 6 பவுண்டரிகளும் 2 சிக்சர்ளும் அடங்கும். சாம் கோன்ஸ்டாஸ் போட்ட பிள்ளையார் சுழி, ஆஸ்திரேலிய அணியின் வலுவான பேட்டிங்கிற்கு அடித்தளமாக அமைந்தது. அந்த அணி 36 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 136 ரன்கள் எடுத்து வலுவாக இருந்தது. மற்றொரு முனையில் உஷ்மான் கவாஜா அரைசதம் அடித்தார். 

பிளேயிங் லெவனை பொறுத்தவரை இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. சுப்மன் கில் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் நடந்து முடிந்திருக்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

மேலும் படிக்க | சிஎஸ்கேவிற்கு பெரும் பின்னடைவு! டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா ஐபிஎல் 2025ல் இல்லை?

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.