மிரட்டும் வித்தைகளை கத்து வைத்திருக்கும் ஒரு பயமறியா இளஞ்சிங்கத்தை அரங்கம் நிறைந்த சர்க்கஸ் கூடாரத்துக்குள் இறக்கி விட்டதைப் போன்று இருந்தது கான்ஸ்டஸின் ஆட்டம். அத்தனை சுவாரஸ்யம்… அத்தனை விறுவிறுப்பு. கிரிக்கெட் உலகின் பேட்டர்கள் அத்தனை பேரும் கண்டு அஞ்சும் பும்ராவை அநாயசமாக அடித்து துவைத்து விட்டு ரசிகர்களுடன் கூலாக செல்பி எடுத்துக் கொண்டிருக்கிறார் அந்த 19 வயது இளைஞன்.
பெரும் நெருக்கடிக்கு மத்தியில்தான் கான்ஸ்டஸை ஆஸ்திரேலிய அணி மெல்பர்ன் டெஸ்ட்டுக்கு அழைத்து வந்தது. முதல் மூன்று டெஸ்ட்களிலும் ஆஸ்திரேலியாவின் ஓப்பனர்கள் சோபிக்கவே இல்லை. 6 இன்னிங்ஸ்களில் மெக்ஸ்வீனி 72 ரன்களையும் கவாஜா 63 ரன்களையும் மட்டுமே எடுத்திருந்தனர். குறிப்பாக, பும்ராவுக்கு எதிராக இருவருமே கடுமையாக திணறியிருந்தனர். பும்ரா மட்டுமே 8 முறை இவர்கள் இருவரையும் இந்தத் தொடரில் மட்டுமே ஆட்டமிழக்கச் செய்திருந்தார். இதனால்தான் மெக்ஸ்வீனியை டிராப் செய்துவிட்டு கான்ஸ்டஸை அணியில் எடுத்தார்கள். கான்ஸ்டஸூக்கு 19 வயதுதான். சொற்ப அளவிலான முதல்தர போட்டிகளில் மட்டுமே ஆடியிருக்கிறார். இந்த ஆண்டுதான் பிக்பேஷ் லீகிலும் அறிமுகமாகியிருந்தார்.
ஆனாலும் இந்தியா A க்கு எதிராக ஒரு இன்னிங்ஸிலும் ஆஸ்திரேலியாவின் ப்ரைம் மினிஸ்டர் லெவனுக்கு எதிரான ஒரு போட்டியிலும் நன்றாக ஆடியிருந்தார், சதமும் அடித்திருந்தார். அந்த நம்பிக்கையில்தான் ஆஸ்திரேலிய அணி அவரை அணிக்குள் கொண்டு வந்து நேரடியாக லெவனுக்குள்ளும் சேர்த்தது.
கான்ஸ்டஸூக்கு ஒரே ஒரு டாஸ்க்தான் கொடுக்கப்பட்டது. நியூபாலில் பும்ராவை சமாளித்து நல்ல தொடக்கம் கொடுக்க வேண்டும். இது இமாலயச் சவாலென எல்லாருக்குமே தெரியும். ஆனால், கான்ஸ்டஸ் நம்பிக்கையோடு ஆடினார்.
தனது அறிமுகப் போட்டியில் முதல் பந்தையே உலகின் அபாயகரமான பௌலரான பும்ராவுக்கு எதிராக எதிர்கொள்கிறோம் என்கிற பதற்றம் கான்ஸ்டஸூக்கு இல்லவே இல்லை. முதல் பந்தையே நிதானமாக லீவ் செய்தார். முதல் ஓவரின் அத்தனை பந்துகளையும் பார்த்து ஆடினார். ரன் கணக்கை தொடங்கவில்லை. ஆனாலும், பரவாயில்லை. பும்ராவுக்கு எதிராக ஒரு 19 வயது இளைஞன் ஒரு ஓவர் முழுக்க சர்வைவ் ஆனதே பெரிய விஷயமாகத்தான் பார்க்கப்பட்டது. ஆனால், கான்ஸ்டஸின் பார்வையில் ஒரு தீர்க்கம் இருந்தது. பேக்வர்ட் ஸ்கொயரில் தட்டி விட்டு தனது முதல் சர்வதேச ரன்னையே பும்ராவுக்கு எதிராகத்தான் எடுத்தார். இதன்பின்தான் ஆட்டமே ஆரம்பித்தது.
பும்ராவின் விசைக்கு எதிராக பேட்டை விடவே தயங்கும் பேட்டர்களுக்கு மத்தியில் கான்ஸ்டஸ் ஸ்கூப் ஷாட்களையும் ரேம்ப் ஷாட்களையும் முயன்றார். எதுவுமே பேட்டில் படவில்லை. இன்னும் கொஞ்சம் நேர்த்தி இருந்தால் நன்றாக இருந்திருக்குமே என தோன்றியது. ஆனாலும் கான்ஸ்டஸின் துணிச்சல் வியக்க வைத்தது. அந்த துணிச்சலுக்கான பயன் 7 வது ஓவரில் விளைந்தது. அந்த ஓவரில் மட்டும் 3 ரேம்ப் ஷாட்கள். இரண்டு பவுண்டரிக்கள் மற்றும் ஒரு சிக்சர். நடப்புத் தொடரில் பும்ராவுக்கு எதிராக ஒரு பேட்டர் அடிக்கும் முதல் சிக்சர்.
வெகு சமீபத்தில் பும்ராவை எந்த வீரரும் இப்படி ஆதிக்கமாக எதிர்கொண்டு பார்க்கவே இல்லை. பும்ரா பதற்றமானார். இந்திய அணி பதற்றமடைந்தது. கோலி வேண்டுமென்றே கான்ஸ்டஸின் மீது மோதி ஸ்லெட்ஜ்ஜிங் செய்தார். அப்போதும் கான்ஸ்டஸ் ஓயவில்லை. பும்ரா வீசிய அடுத்த ஓவரில் 18 ரன்கள். டி20 இல் ஆடுவதைப் போல வெகு இலகுவாக ரேம்ப் ஷாட்களை ஆடினார். பும்ராவின் லெந்தை குலைத்ததுதான் கான்ஸ்டஸின் வெற்றி. குட்லெந்தில் ஆங்கிள் இன் டெலிவரிக்களாக வீசி எட்ஜ் எடுப்பதுதான் பும்ராவின் பலம். ஆனால், கான்ஸ்டஸ் அடித்த அடியில் பும்ரா அந்த லெந்தை கைவிட்டார். டி20 போல ஓவரின் 6 பந்துகளை 6 விதவிதமான லெந்த்களில் வீசினார். இது கான்ஸ்டஸூக்கு கூடுதல் சௌகரியமாகிவிட்டது. வழக்கமாக 3 ஸ்லிப்களை வைத்து அட்டாக் செய்யும் ரோஹித் கான்ஸ்டஸூக்கு 2 ஸ்லிப்களை மட்டுமே வைத்து டீப்பில் பீல்டர்களை பரப்பினார். கான்ஸ்டஸூக்கு எதிராக சீக்கிரமே தற்காப்பு மனநிலைக்கு வந்து சேர்ந்தது இந்திய அணி.
கான்ஸ்டஸ் செய்த இன்னொரு நல்ல விஷயம் பும்ராவின் முதல் ஸ்பெல்லில் பெரும்பாலான ஓவர்களை அவரே எதிர்கொண்டு விட்டார். 9 வது ஓவரில்தான் கவாஜா பும்ராவுக்கு எதிராக முதல் பந்தையே எதிர்கொண்டார். இதனால் அவரின் விக்கெட்டும் காக்கப்பட்டது.
பும்ரா மட்டுமல்ல சிராஜையும் க்ரீஸை விட்டு வெளியே வந்து ஸ்பின்னர்களை ஆடுவதைப் போல ஆடினார். 52 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நின்று பெரிய இன்னிங்ஸை ஆடுவார் என எதிர்பார்க்கையில் ஜடேஜாவின் பந்தில் lbw ஆகி 60 ரன்களில் வெளியேறினார். ஆனாலும் அவர் செய்ய வேண்டிய வேலையை கச்சிதமாக செய்து முடித்துவிட்டார். ஆஸ்திரேலியாவுக்கு தேவையான அந்த தொடக்க மொமண்டம் கிடைத்துவிட்டது. அத்தோடு பாக்ஸிங் டே டெஸ்ட்டின் முதல் செஷனிலேயே ஆஸி அணிக்கு ஒரு புதிய ஸ்டாரும் கிடைத்துவிட்டார்.!