புதுக்கோட்டை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்நாள் முழுவதும் காலணி அணியப் போவதில்லை என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி விமர்சித்துள்ளார்.
புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சாட்டையில் அடிப்பது என்பது தண்டனை. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொள்கிறார் என்றால், அவர் செய்த ஏதோ ஒரு குற்றத்துக்காக தனக்குத்தானே தண்டனை அளித்துக்கொள்கிறார் என்று பொருள்.
பொதுவாக பழநிக்கு பாதயாத்திரை செல்வோர் காலணி அணியமாட்டார்கள். அதுபோலக்கூட அவரும் செய்யலாம். ஆனால், திமுகவை ஆட்சியை விட்டு அகற்றும்வரை காலணி அணிய மாட்டேன் என அண்ணாமலை கூறுவது உண்மையென்றால், அவர் வாழ்நாள் முழுவதும் காலணி அணியப் போவதில்லை.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் விசாரணையின் முடிவில்தான் விஷயங்கள் தெரியவரும். குற்றவாளியைக் காப்பாற்ற வேண்டிய எந்த அவசியமும் திமுகவுக்கு இல்லை.
எந்த இடத்தில் குற்றம் நடக்கும் என்பதை முன்கூட்டியே யாரும் யூகிக்க முடியாது. நீதிமன்ற வளாகம் அருகே கொலை சம்பவம் நடந்த பிறகு நீதிமன்ற வளாகத்தி்ல துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்படுகின்றனர். பல்கலைக்கழக வளாகத்துக்கும், அத்தகைய பாதுகாப்பு தேவையென்றால் அதற்கும் முதல்வர் உரிய அறிவிப்புகளை வெளியிடுவார். இவ்வாறு அவர் கூறினார்.