கோவை மாவட்டம் ஆனைக்கட்டியின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தன் குடும்பத்துடன் வசிக்கிறார் நாயகன் தர்மன் (குணாநிதி). நியாயத்துக்காக நிர்வாகத்தை எதிர்த்து கேள்வி கேட்டதற்காகத் தான் படிக்கும் பாலிடெக்னிக்கிலிருந்து சஸ்பெண்டு செய்யப்படுகிறார். நண்பர்களுடன் கிராமத்தில் கிடைத்த வேலையைச் செய்து வருபவரிடம் வந்து சேர்கிறது ஒரு பெண் நாய்.
அதைப் பாசத்தோடு குடும்ப உறுப்பினராகக் கருதி வளர்க்கத் தொடங்குகிறார். மறுபுறம் கேரள மாவட்டம் அகழியில் அரசியல் செல்வாக்கு மிக்க மனிதராக வலம்வரும் செம்பன் வினோத்துக்கு தன் மகள் மீது அளவுகடந்த பாசம். அவருக்காக எதையும் செய்யும் அடாவடி அப்பாவாக அச்சமூட்டுகிறார். அவரின் பாதையும் தர்மனின் பாதையும் சந்தித்துக் கொண்ட பின்னர் நடக்கும் விபரீதங்களே இந்த ‘அலங்கு’.
அறிமுக நாயகன் குணாநிதி தனக்குக் கிடைத்த ஆழமானதொரு பாத்திரத்துக்கு நியாயம் சேர்க்க முற்பட்டிருக்கிறார். சண்டைக் காட்சிகள், கோபம், ஆவேசம் போன்றவற்றில் கரை சேர்பவர், பிற உணர்வுகளில் காட்டுக்குள் கண்ணைக் கட்டிவிட்ட கணக்காகத் தடுமாறியிருக்கிறார். அவரின் தாயாராக வரும் மலையாள நடிகை ஸ்ரீரேகா மிரட்டலான பர்ஃபாமென்ஸ்! வழக்கமான அம்மா பாத்திரமாக மூக்கைச் சிந்தாமல் அதிரடியானவராக, நியாயத்தின் பக்கம் நிற்பவராக அசத்தியிருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும் ஒரு கை பார்த்திருப்பது பாராட்டத்தக்கது.
அதிரடி வில்லனாக அறிமுகப்படுத்தப்படும் செம்பன் வினோத், சிறிது நேரத்திலேயே பின்சீட்டுக்குத் தள்ளப்படுகிறார். அத்தனை பில்டப்புடன் வருபவருக்கு அதற்குப் பின்னர் சேர்ந்தாற்போல இரண்டு வசனங்கள்கூட இல்லை என்பது ஏமாற்றமே! அவரின் தம்பி பிலிப்பாக பிரதான வில்லனாக அப்பனி சரத் தன் பாத்திரத்தின் தன்மை உணர்ந்து நடித்திருக்கிறார். கையை இழந்தவுடன் ஜீப் ஓட்ட முடியாமல் அவர் காட்டும் அந்த எமோஷன் சென்டிமென்ட் டச்! காளி வெங்கட் தன் வழக்கமான ஸ்கெட்சில் வலம் வந்து நெகிழச் செய்கிறார். கொற்றவை, ரெஜின் ரோஸ், நாயகனின் நண்பர்களில் ஒருவராக வரும் அஜய் எனப் பிற பாத்திரங்களின் நடிப்பிலும் குறை ஒன்றுமில்லை. காளி என்கிற காளியம்மாளாக வரும் பெண் நாயிடம் வாங்கிய நடிப்பு நெகிழ்ச்சியாக இருந்தது சிறப்பு!
பாண்டிகுமாரின் ஒளிப்பதிவு ஆனைக்கட்டி வனங்களின் அடர்த்தியையும் இரவு நேர அமானுஷ்யத்தையும் அள்ளி வந்திருக்கிறது. கேரளாவின் ரப்பர் தோட்டம், மலைப் பரப்புகள், மலைக்கோயில் சடங்குகள், சாகசக் காட்டுப் பயணம் என எல்லாவற்றிலும் இருக்கும் நேர்த்தியான ஒளிப்பதிவுக்கு வலு சேர்த்திருக்கிறது சான் லோகேஷின் படத்தொகுப்பு. அதே சமயம், பாம்பு, ஓநாய்கள் வரும் வி.எஃப்.எக்ஸ் காட்சிகளின் தரத்துக்கு இன்னுமே உழைத்திருக்கலாம். அதனாலேயே அந்தக் காட்சிகள் உண்டாக்க வேண்டிய பதைபதைப்பு மிஸ்ஸிங்!
வழக்கமானதொரு பழிக்குப் பழி வாங்கும் கதையில், கேரளா – தமிழ்நாடு பார்டர்களில் கழிவினைக் கொட்டும் பிரச்னை, மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் குறித்த அரசியல் கேள்விகள், சாதியப் பாகுபாடு, ஐந்தறிவு ஜீவன்கள் உட்பட அனைத்து உயிர்களையும் ஒன்றென மதிக்கும் மனிதம் எனப் பல விஷயங்களைப் பேச முற்பட்டிருக்கிறார் இயக்குநர் எஸ்.பி.சக்திவேல். மலைவாழ் மக்களின் வாழ்வியல், ஆன்மிகச் சடங்குகள், கேரளம் மற்றும் தமிழக வனப்பகுதியின் அழகியல் என அனைத்தின் வேர்களையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறது அவரின் எழுத்து.
மிதமானதொரு வேகத்தில் த்ரில்லராக நகரும் முதல் பாதி, இடைவேளை திருப்பத்தில் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. ஆனால், அதன் பிறகு பார்த்துப் பழகிய சேஸிங் டிராமாவாக சோர்ந்து போய் தேங்கிவிடுகிறது திரைக்கதை. காட்டுவழி சாகசப் பயணம் என்ற ஐடியா சுவாரஸ்யமாக இருந்தாலும், காட்டையே ஒரு கதாபாத்திரமாக்கி, அதன் மூலம் த்ரில் உணர்வைக் கடத்தாமல் தட்டையாக நகர்கின்றன காட்சிகள்.
‘அனிமல் அட்டாக்’ என்ற ஆயுதமும் சுமாரான காட்சியமைப்புகளால் வலுவிழந்து போகிறது. பேசப்படவேண்டிய சமூகப் பிரச்னைகள், பார்டர் அரசியல், நாய் கதாபாத்திரம் எனத் தொடக்கத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டவை அனைத்தும் இரண்டாம் பாதியில் காணாமல் போவதோடு, ரிவெஞ்ச் ரிப்பீட்டு என்ற மோடுக்கு படம் தாவிவிடுவதும் ஏமாற்றமே!
டெக்னிக்கலாக மிரட்டும் இந்த ‘அலங்கு’, விலங்கின்பால் அன்பு செலுத்துங்கள் என்பதை இன்னுமே வலிமையானதொரு திரைக்கதை கொண்டு வலியுறுத்தியிருக்கலாம்.