ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமியை மீட்க, 70 மணி நேரத்துக்கு மேலாக மீட்பு குழுவினர் போராடி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் கோத்புத்லி -பெஹ்ரோர் மாவட்டம் பதியாலி தானி பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுமி சேத்தனா. இவர் கடந்த திங்கள் கிழமை தனது தந்தையின் விவசாய நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு தோண்டி வைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றில் சேத்தனா தவறி விழுந்தார். 150 அடி ஆழத்தில் விழுந்த சிறுமியை மீட்க தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் 70 மணி நேரத்துக்கு மேலாக போராடி வருகின்றனர்.
சிறு வளையம் மற்றும் கொக்கி மூலம் சிறுமியை மீட்கும் முயற்சி தோல்வியடைந்தது. இதையடுத்து ஆழ்துளை கிணற்றுக்கு இணையாக அருகே ராட்ச குழி தோண்ட பாலங்களுக்கு தூண் அமைக்க துளையிடும் இயந்திரம் கொண்டுவரப்பட்டது. தற்போது ஆழ்துளை கிணற்றுக்கு கிடைமட்டமாக சுரங்கம் தோண்டி சிறுமியை மீட்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. சிறுமி விழுந்த ஆழ்துளை கிணறு மிகவும் குறுகலாக இருப்பதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மீட்பு பணி 70 மணி நேரத்தை தாண்டிவிட்டது. மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸ் வாகனத்துடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணி விரைவில் முடிவடையும் என உள்ளூர் காவல் நிலைய ஆய்வாளர் முகமது இம்ரான் தெரிவித்துள்ளார். மகள் சேத்தனாவை பார்ப்பதற்காக, அவரது தாய் தோலி தேவி கடந்த திங்கள் கிழமையிலிருந்து சாப்பிடாமல் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளார்.