புதுடெல்லி,
மேற்கு அரபிக்கடலில் செல்ல கூடிய வணிக மற்றும் பயணிகள் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் கடற்கொள்ளையர்கள் அவ்வப்போது தாக்குதல்களை நடத்துவது வழக்கம். சரக்குகளை கொள்ளையடிப்பதும், பயணிகளை சிறை பிடித்து செல்வதும் நடந்து வந்த சூழலில், அதனை எதிர்கொள்ளும் பணியில் இந்திய கடற்படை ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த ஓராண்டில், ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் மற்றும் கடற்கொள்ளை என 25-க்கும் மேற்பட்ட சம்பவங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மேற்கு அரபிக்கடலில் 30-க்கும் மேற்பட்ட கப்பல்களை இந்திய கடற்படை குவித்துள்ளது.
நம்பத்தக்க மற்றும் விரைவான நடவடிக்கைகளால், அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்களாக இருந்தபோதும், 400-க்கும் மேற்பட்டோரின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டு உள்ளன. 230-க்கும் மேற்பட்ட வணிக கப்பல்கள் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு உள்ளன.
இதனால், 90 லட்சம் மெட்ரிக் டன் சரக்குகள் பாதுகாக்கப்பட்டு உள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.34,117 கோடி (400 கோடி அமெரிக்க டாலர்கள்) ஆகும் என தெரிவித்து உள்ளது.