கவுகாத்தி,
அசாமின் கவுகாத்தி நகரில் லேட் கேட் பகுதியை சேர்ந்தவர் மவுசுமி கோகாய். இவரை காதலித்து வந்த பூபென் தாஸ் என்பவர், கோகாயை அவருடைய வீட்டுக்கு வெளியே கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பியுள்ளார்.
இதுபற்றி டி.ஜி.பி. ஜி.பி. சிங் வெளியிட்ட செய்தியில், ஆன்லைன் வழியே வாகனம் ஒன்றை முன்பதிவு செய்து விட்டு, கோகாய் வீட்டுக்கு வெளியே நின்றிருக்கிறார். அப்போது, காரில் வந்த பூபென் தாஸ் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை வெளியே எடுத்து, கோகாயை குத்தி கொலை செய்து விட்டு தப்பியிருக்கிறார்.
இந்த சம்பவம் பற்றி அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக கோகாயை மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். எனினும் அவர் உயிரிழந்து விட்டார். இதன்பின்னர், போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், பூபென் தாஸை போலீசார் பிடித்தனர். அப்போது, அவர் கத்தியால் தன்னைத்தானே குத்தி கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு முன், பூபென்னுக்கு எதிராக பான் பஜார் காவல் நிலையத்தில், அவரால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது என கூறி கோகாய் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்துள்ளனர்.