குஜராத் மாநிலத்தில் பல்கலைக்கழகத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸாரை தாக்கியதாக கூறி காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ உள்ளிட்ட 21 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மாணவர்கள் விடுதியில் மது பயன்படுத்தப்படுவதாக கூறி ஹேமசந்திரயா நார்த் குஜராத் பல்கலைகழகத்துக்கு (எச்என்ஜியு) எதிராக, படன் சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ கிரித் படேல், சித்பூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ சந்தன்ஜித் தாக்கூர், மாணவர் அமைப்பினர் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின்போது காங்கிரஸ் கட்சியின் வன்முறையில் ஈடுபட்டதுடன் போலீஸாரையும் தாக்கியதாக கூறி கிரித் படேல் உள்ளிட்ட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்யப்பட்னர்.
இதுகுறித்து காவல் துறை துணை கண்காணிப்பாளர் கே.கே. பாண்டியா கூறுகையில், “ உள்ளூர் போலீஸார் முன்பாக சரண் அடைந்ததையடுத்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கிரித் படேல், சந்தன்ஜி தாக்கூர் உள்ளிட்ட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸாரை அசிங்கமாக திட்டியதுடன் பணியில் இருக்கும் காவலரை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கவும் செய்துள்ளனர். எனவே அவர்கள் மீது பிஎன்எஸ் 121-1 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார். குஜராத்தில் மதுபானங்கள் பயன்பாட்டுக்கான தடை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.