ஜெய்ஸ்வால் ரன்அவுட்… விராட் கோலியின் தவறா? நேரலையில் சண்டைப் போட்ட மூத்த வீரர்கள்

Jaiswal Run Out Controversy: உலகின் பிரம்மாண்டமான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்று, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம். இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் தொடங்கும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி உலகம் முழுவதும் பிரசித்த பெற்ற ஒன்றாகும், கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போட்டியை எதிர்நோக்கி காத்திருப்பார்கள். மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பாக்ஸிங் டே போட்டி எப்போதும் ஹவுஸ்புல்லான பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த பரபரப்புடன் நடைபெறும்.

அந்த வகையில் இந்தாண்டு மெல்போர்ன் பாக்ஸிங் டே போட்டியில் இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் நான்காவது போட்டியான இதை காண்பதற்கு முதல் நாளான நேற்று (டிச. 26) 87,242 பார்வையாளர்களும், இன்று (டிச. 27) 85,147 பார்வையாளர்களும் வருகை தந்தனர். இந்த போட்டியில் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி நேற்றை முதல் நாளில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்களை எடுத்தது. ஸ்டீவ் ஸ்மித் உடன் பாட் கம்மின்ஸ் இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.

தொடரும் ரோஹித்தின் மோசமான ஆட்டம்

இன்றைய இரண்டாம் நாளின் ஆரம்பத்தில் இருந்தே அதிரடி காட்டிய ஆஸ்திரேலியா, 474 ரன்களை குவித்து ஆல்-அவுட்டானது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மீத் 140, லபுஷேன் 72, சாம் கான்ஸ்டஸ் 60, உஸ்மான் கவாஜா 57, பாட் கம்மின்ஸ் 49 ரன்களை குவித்தனர். பும்ரா 4, ஜடேஜா 3, ஆகாஷ் தீப் 2, வாஷிங்டன் சுந்தர் 1 என இந்திய அணி பந்துவீச்சாளர்கள் கடும் சிரமப்பட்டு ஆஸ்திரேலியாவை ஆல்அவுட்டாக்கினர். தொடர்ந்து பேட்டிங் வந்த இந்திய அணிக்கு இம்முறை ரோஹித் ஓப்பனிங்கில் இறங்கி 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஜெய்ஸ்வால் – விராட் கோலி பார்ட்னர்ஷிப்

மூன்றாவது ஓவரிலேயே களம் புகுந்த கேஎல் ராகுல், ஜெய்ஸவாலுடன் சேர்ந்து நிதானமாக ரன்களை எடுத்தார். இருப்பினும், இரண்டாவது செஷனின் கடைசி பந்தில் பாட் கம்மின்ஸ் வீசிய அற்புதமான பந்தில் கேஎல் ராகுல் போல்ட் ஆனார். அவர் 24 ரன்களையே அடித்திருந்தார். எனினும் இதன்பின் ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால் – விராட் கோலி ஜோடி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தது. ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்ததும் அதிரடி காட்டத் தொடங்கினார். மறுமுனையில் விராட் கோலியின் எவ்வித கவனச்சிதறலும் இன்றி விளையாடி வந்தார். இந்த ஜோடி மொத்தம் 26 ஓவர்களில் 102 ரன்களை குவித்தது.

ஜெய்ஸ்வால் ரன் அவுட்

அந்த வகையில், 41ஆவது ஓவரின் கடைசி பந்தில் ஜெய்ஸ்வால் மிட்-ஆன் திசையில் நேராக அடித்து, சிங்கிள் ஓடும்படி விராட் கோலியை அழைத்தார். ஆனால், விராட் கோலி ஜெய்ஸ்வால் அழைப்பை ஏற்று ஓடாமால் பந்து போவதை பார்த்தவாறு சற்றே ஓடத் தொடங்கி அதன்பின் நின்று பின்னோக்கி ஓடினார். ஆனால் ஜெய்ஸ்வால் முக்கால்வாசி ஆடுகளத்தை தாண்டிவிட்டார். இதனால், ஜெய்ஸ்வால் ரன்அவுட்டாகி வெளியேறினார். இது இந்திய அணியின் பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. அதுவரை கவனமாக விளையாடி வந்த விராட் கோலியும் 42ஆவது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழக்க அடுத்து நைட் வாட்ச்மேனாக வந்த ஆகாஷ் தீப்பும் 44.3 ஓவரில் டக்அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். 

இந்திய அணி தடுமாற்றம்

இதனால், இன்றைய ஆட்டம் நிறைவடைந்த போது இந்திய அணி 46 ஓவர்களில் 164 ரன்களை எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இன்னும் முதல் இன்னிங்ஸில் 310 ரன்கள் பின்னடைவில் இருக்கும் இந்திய அணியில், ரிஷப் பண்ட் 6 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இவர்களுக்கு அடுத்து நிதிஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் ஆகிய பேட்டர்கள் உள்ளனர். அடுத்து சிராஜ், பும்ரா மட்டுமே உள்ளனர். ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சில் பாட் கம்மின்ஸ், ஸ்காட் போலாண்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர். 

சஞ்சய் மஞ்சரேக்கர் vs இர்பான் பதான்

அந்த வகையில், ஜெய்ஸ்வாலின் ரன்அவுட்தான் பெரிய பிரச்னையை ஏற்படுத்தியது. வர்ணனையாளர்கள் மத்தியிலும் இது சலசலப்பை உண்டாக்கியது. இந்த ரன்அவுட்டில் யார் மீது தவறு என ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஜெய்ஸ்வால் ரன்அவுட் விவகாரத்தில் முன்னாள் இந்திய வீரர்கள் சஞ்சய் மஞ்சரேக்கர் மற்றும் இர்பான் பதான் ஆகியோருக்கு இடையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலின் வர்ணனையின்போது கடும் வாக்குவாதம் உண்டாகியது. மஞ்சரேக்கர் விராட் கோலிக்கு எதிராகவும், இர்பான் பதான் ஜெய்ஸ்வாலுக்கு எதிராகவும் பேசினர். 

யார் மீது தவறு?

மஞ்சரேக்கர் பேசியதாவது, “பந்து மெதுவாகவே சென்றது, கோலி ரன் அவுட் ஆகியிருப்பார் என்று எனக்கு தோன்றவில்லை. அது ஜெய்ஸ்வாலின் அழைப்பு. ஒரு கொஞ்சம் ரிஸ்க் உள்ள ரன்னாக இருக்கலாம் ஆனால் ஜெய்ஸ்வால் தான் டேஞ்சர் எண்டில் இருந்தார், கோஹ்லி அல்ல. விராட் கோலியின் சிறுபிள்ளைத்தனமான தவறு இது. விராட் கோலி திரும்பிப் பார்த்து, அது ரன் இல்லை என்று முடிவு செய்தார், ஜெய்ஸ்வால் உடைய அழைப்பு தவறாக இருந்திருந்தால், நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் ஜெய்ஸ்வாலே அவுட்டாகியிருப்பார்” என்றார். 

பந்து எவ்வளவு வேகமாக பீல்டரான பாட் கம்மின்ஸிடம் சென்றது என்பதைப் பார்த்த கோலிக்கு ரன் எடுப்பதில் நம்பிக்கை இல்லை. ஒரு நான்-ஸ்ட்ரைக்கர் என்ற முறையில், விராட்டுக்கும் அந்த ரன் ஆபத்தானது என்று நினைத்தால் அதை நிராகரிக்க உரிமை உண்டு என்று இர்பான் பதான் பதிலளித்தார். தொடர்ந்து இருவருக்கும் இடையே சற்றே பரபரப்பான வாக்குவாதம் நடந்தது. இருவரும் ஒரே நேரத்தில் பேசியதால் குழப்பம் ஏற்பட்டது. உடனே மஞ்சரேக்கர் இர்பான் பதானை நோக்கி,”நீங்கள் என்னை பேச அனுமதிக்க விரும்பவில்லை என்றால் பரவாயில்லை” என கூறினார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.