திரு.மாணிக்கம் விமர்சனம்: நேர்மையான அந்தக் கதாபாத்திரத்துக்கு சல்யூட்… ஆனால் படத்துக்கு?

எளிய மனிதனின் நேர்மை படும் பாட்டையும், அதைக் காப்பதற்கான அவனின் போராட்டத்தையும் பேசுகிறார் இந்த ‘திரு.மாணிக்கம்’.

கேரள மாநிலம் குமுளியில் லாட்டரி கடையோடு சிறிய புத்தகக் கடையும் நடத்திவரும் மாணிக்கம் (சமுத்திரக்கனி), தன் மனைவி (அனன்யா), இரண்டு மகள்கள், மனைவியின் தம்பி, மாமியார் ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார். இரண்டாவது குழந்தைக்குப் பேச்சுத்திறன் சவால் இருப்பதால் அவருக்கான மருத்துவச் செலவு, கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான செலவு, மனைவியின் தம்பியை வெளிநாட்டிற்கு அனுப்புவதற்கான செலவு எனப் பல பொருளாதார நெருக்கடியில் உழல்கிறார்.

Thiru Manickam Review

இந்நிலையில், ஊர், பெயர் தெரியாத முதியவர் ஒருவர் (பாரதிராஜா), லாட்டரி சீட்டு ஒன்றை வாங்குகிறார். ஆனால், கையிலிருந்த பணம் தொலைந்துவிட்டதால், நாளை பணம் கொடுத்து வாங்கிக் கொள்வதாகவும், அதுவரை லாட்டரியைப் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் எனவும் சொல்லிவிட்டுச் செல்கிறார். நல்வாய்ப்பாக, அந்த லாட்டரி சீட்டுக்கு ஒன்றரை கோடி பரிசு விழுகிறது.

இப்போது அந்த லாட்டரி அந்தப் பெரியவருக்குச் சொந்தமா, அவர் பணமே கொடுக்காததால் கடைக்காரரான சமுத்திரக்கனிக்கே சொந்தமா என்ற குழப்பம் உண்டாகிறது. அதைத் தொடர்ந்து மாணிக்கம் எடுக்கும் முடிவு என்ன, அவரின் குடும்ப உறுப்பினர்கள் நிர்ப்பந்திப்பது என்ன என்பதை மெலோ டிராமாவாகத் தந்திருக்கிறார் இயக்குநர் நந்தா பெரியசாமி.

நேர்மை, தெளிவு, பக்குவம், பொறுப்பு, அன்பு என சமுத்திரக்கனிக்காகவே எழுதப்பட்ட மாணிக்கம் கதாபாத்திரத்தைத் தன் அனுபவ நடிப்பால், பார்வையாளர்களுக்கு நெருக்கமாக்கியிருக்கிறார் திரு. சமுத்திரக்கனி.

Thiru Manickam Review

அமைதியான பெண்ணாகவும், பொறுப்பான அம்மாவாகவும் வந்தாலும், தேவையான இடங்களில் தேவையான அவதாரங்களையும் எடுத்து, படத்திற்கு வலுசேர்த்திருக்கிறார் அனன்யா. கோபத்தையும், ஆற்றாமையையும் ஒரே சேர மனதிற்குள் குமைந்துகொள்ளும் இடத்தில் தன் கதாபாத்திரத்தையும் ஆழமாக்கியிருக்கிறார் அனன்யா. முதுமையின் நடுக்கம், வெகுளித்தனம், வைராக்கியம் போன்றவற்றை தன் உடல்மொழியால் கொண்டுவந்து, நம் அனுதாபத்தைப் பெறுகிறார் பாரதிராஜா. மகள்களாக நடித்த இரு சிறுமிகளிடமும் குறைவில்லாத நடிப்பை வாங்கியிருக்கிறார் இயக்குநர்.

தன் அனுபவ நடிப்பால் கதைக்கருவிற்குக் கனம் கூட்டியிருக்கிறார் நாசர். இளவரசு, சின்னி ஜெயந்த் ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்ய, சாம்ஸ், ஶ்ரீமன், கருணாகரன், வடிவுக்கரசி போன்ற தெரிந்த முகங்கள், எந்தத் தாக்கத்தையும் தராமல் வந்து போகின்றன. சக பேருந்துப் பயணியாக வரும் தம்பி ராமையா, தன் காட்சிகள் பத்து நிமிடம் மட்டுமே என்பதாலோ என்னவோ, இரண்டு மணி நேரத்துக்கு நம் நினைவிலிருக்கும்படி, தேவையான அளவு ஓவர்டோஸ் நடிப்பை அள்ளி தெளித்து எரிச்சலைத் தருகிறார்.

Thiru Manickam Review

இடுக்கியின் குளுமையோடு, கதாபாத்திரங்களின் உணர்வுகளை தன் ப்ரேம்களாலும், லாங் ஷாட்களாலும் கடத்தி, படத்திற்கு வலுசேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார்.எம். முக்கியமாக, பேருந்து பயண காட்சிகளைச் சுவாரஸ்யமாக்க மெனக்கெட்டிருக்கிறார். பதற்றமான தருணங்களில் மேலும் பதற்றத்தைக் கூட்டியிருக்கிறது குணாவின் படத்தொகுப்பு. விஷால் சந்திரசேகரின் இசையில் எல்லா பாடல்களும் திரையோட்டத்தோடு வந்து, கதைக்களத்தை ஆழமாக்கியிருக்கின்றன. பின்னணி இசையிலும் தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறார்.

சாமானியர்களின் எளிய கதையை எடுத்துக்கொண்டு, குடும்ப உறவுகளால் உணர்வுகளையும், பரபர காட்சிகளால் விறுவிறுப்பையும் சேர்த்து ஃபீல் குட் படமாகச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் நந்தா பெரியசாமி. ஆனால், படத்தின் அந்த லாட்டரி மையக்கரு, ஏற்கெனவே வெற்றி, ஹரீஷ் பேரடி நடிப்பில் வெளியான ‘பம்பர்’ படத்தின் கதையை நினைவூட்டுவது ஏனோ?!

Thiru Manickam Review

மாணிக்கம் கதாபாத்திரம், குடும்பப் பின்னணி, வாழ்க்கைச் சூழல் போன்றவற்றைக் காட்டிவிட்டு, சிறிது நேரத்திலேயே ‘நேர்மையான மனிதர், லாட்டரி பரிசு, துரத்தும் வறுமை’ என்ற கதைக்குள் சென்றுவிடுகிறது திரைக்கதை. குடும்பம், மதம், சமூகம் போன்றவற்றில் பொருளாதாரம் செலுத்தும் ஆதிக்கம், அதற்காக வேஷம் கட்டும் மனிதர்கள், எளியவர்களுக்கு எதிரான அதிகாரம் போன்றவற்றை ஆங்காங்கே நையாண்டியாகவும், அழுத்தமான வசனங்களாகவும் விமர்சிக்கிறது படம்.

இரண்டாம் பாதியில் வரும் பரபர காட்சிகளும் பதற்றத்தைக் கூட்டியிருக்கின்றன. மாணிக்கம் கதாபாத்திரத்திற்கான பின்கதை யூகிக்கும்படி இருந்தாலும், கதைக்கருவிற்கான நியாயத்தைச் செய்திருக்கிறது.

ஆனால், தம்பி ராமையா காமெடி, சாம்ஸ், ஶ்ரீமன், கருணாகரன் ஆகிய கதாபாத்திரங்களின் காட்சிகள், செயற்கைத்தனமான மழைக்காட்சிகள், யானை காட்சிகள் என ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவிலும் அபாயப் பள்ளங்களில் சிக்கி, திணறலுடனே நகர்கிறது திரைக்கதை. தேவைக்கு மீறி இழுக்கப்பட்ட சென்ட்டிமென்ட் காட்சிகள், யூகிக்கும்படியான கதாபாத்திரங்களின் திருப்பங்கள் போன்றவைப் பார்வையாளர்களுக்குப் பயணக் களைப்பைத் தருகின்றன. மேலும், சோசியல் மீடியா டிரெண்டிங், நியூஸ் சேனல் விவாதம், உருக்கமான ஸ்பீச், முதல்வர் வரும் காட்சிகள் என க்ளைமாக்ஸில் யதார்த்தம் காணாமல் போய், அதீத நாடகத்தனமே மிஞ்சி நிற்கிறது.

Thiru Manickam Review

சாமானியர்களின் மனதிற்குள் இருக்கும் அறத்தையும், வைராக்கியத்தையும் பேச முயலும் ஒன்லைனுக்கு சபாஷ் வாங்கினாலும், அதைச் சுவாரஸ்ய சாலையில் பயணிக்க விடாமல், திகட்டும் சென்டிமென்ட் காட்சிகள் பக்கம் திருப்பிவிட்டதால், இந்த திரு.மாணிக்கத்திற்கு அரை மனதுடனேயே சபாஷ் போட முடிகிறது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.