ராமதாஸ் கிளப்பிய பிரச்னை!
பாமக சார்பில் திமுக அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்காததைக் கண்டித்து விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அந்த கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசும்போது, “வன்னியர்கள் மேல் உள்ள வன்மத்தால் திமுக அரசு உள்இடஒதுக்கீடு வழங்கவில்லை. திமுகவை வளர்த்தது வன்னியர்கள்தான். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். அவர் முதல்வர் ஆவதற்கு அனுபவமும், தகுதியும் இருக்கிறது. குறைந்தபட்சம் அவருக்கு துணை முதல்வர் பதவியாவது கொடுத்திருக்க வேண்டும். ஆனால், உதயநிதியைத் துணை முதல்வராக்கிவிட்டனர்” என்று பேசியிருந்தார். அன்புமணி ராமதாஸும் துரைமுருகனுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்காதது குறித்து கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் 10.5 சதவிகித இட ஒதுக்கீடு குறித்து துரைமுருகனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “என்னிடம் எதற்கு இந்த கேள்வியைக் கேட்கிறீர்கள். வேறு யாரிடமாவது கேட்டுக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டார்.
மூத்த அமைச்சர்களுக்குத் துணை முதல்வர் பதவி என்று கேள்வி கேட்கும்போதே, “ஒரு பெரிய கும்பிடு போட்டு… ‘போயிட்டு வாங்க’ என்று சொல்லி” அங்கிருந்து கிளம்பிவிட்டார். துரைமுருகன் துணை முதல்வர் குறித்த கேள்விக்குப் பதில் சொல்லாமல் தட்டிக்கழிப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பாகவும் பலமுறை துணை முதல்வர் குறித்த கேள்விக்குப் பதில் சொல்லாமல் இருந்திருக்கிறார் துரைமுருகன்.
துணை முதல்வர்… துரைமுருகன் அப்செட்டா?
பத்திரிகையாளர் சந்திப்பு தொடங்கி சட்டமன்றம் வரை யார் எந்த கேள்வி கேட்டாலும் சளைக்காமல் பதில் சொல்பவர் துரைமுருகன். ஆனால், துணை முதல்வர் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லாமல் கிளம்புவது ஏன் என்பது குறித்து அறிவாலயத்தில் உள்ள மூத்த உறுப்பினர்கள் சிலரிடம் பேசினோம். “துரைமுருகன் பதில் சொல்லாமல் போவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி என்ற பேச்சு எழுந்ததுமே, தனக்கும் துணை முதல்வர் பதவி தரவேண்டும் என்று திமுக தலைமைக்கு மிக அழுத்தமாகக் கோரிக்கை வைத்திருந்தார் துரைமுருகன். சில மாநிலங்களில் இரு துணை முதல்வர்கள் பதவியில் இருப்பதை சுட்டிக்காட்டியதாகவும் தகவல் வெளியானது. இருந்தபோதிலும், அந்த கோரிக்கையை திமுக தலைமை கண்டுகொள்ளவில்லை. அவருக்குத் துணை முதல்வர் பதவி தரும் எண்ணமும் இல்லை. இந்த வருத்தத்தின் வெளிப்பாடே பத்திரிகையாளர்கள் சந்திப்பில் துணை முதல்வர் கேள்வி வந்தாலே தவிர்த்து விடுகிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான சிலர்.
தலைமையைப் பொறுத்தவரை, துரைமுருகனுக்குக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, அரசு பதவிகளில் அவை முன்னவர், அமைச்சரவையில் முக்கிய இலாகா கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கருதுகிறது. ஆனால், துரைமுருகனைப் பொறுத்தவரைக் கட்சியில் மிக மூத்த உறுப்பினர், அரையாண்டுக்கால கட்சி பயணம். மிக மூத்த உறுப்பினர் என்ற வகையில் அவருக்குத் தகுந்த மரியாதையும், இடமும் கொடுக்கவில்லை என்ற வருத்தம் இருந்தது.
சமீப காலமாக அவர் கட்சியில் ஓரம்கட்டப்படுகிறார் என்றும் தனக்கு நெருங்கிய வட்டாரத்தில் மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார் துரைமுருகன் என்ற தகவலும் பரவியது. அந்த வருத்தம் குறித்த தகவல் திமுக தலைமைக்குச் செல்ல, துரைமுருகனை அழைத்துப் பேசி சமாதானம் செய்திருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. இருந்தபோதிலும் வருத்தம் உள்ளுக்குள் இருக்கத்தான் செய்கிறது அவருக்கு.” என்றார்கள்.
திமுகவில் இருக்கும் வேறு சில நிர்வாகிகளோ, “கட்சியின் பொதுச் செயலாளரே அவர் தான். அவர் எப்படி ஓரங்கட்டப்படுவார்? பாமக தேவையில்லாத அரசியல் செய்கிறது. பாமக வில் மூத்த உறுப்பினர்கள் பலர் இருக்கையில் அன்புமணி ராமதாஸ் தலைவர் ஆனது எப்படி? ஏன் ஜி.கே மணியிடம் இருந்து அந்த பதவி பறிக்கப்பட்டது என பதில் சொல்வார்களா என அமைச்சர் சிவசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு முதலில் பதில் சொல்லட்டும் அவர்கள்” என்கிறார்கள்.