புதுடெல்லி: சுற்றுலா, வர்த்தகம், வேலைவாய்ப்பு, கல்வி என பல காரணங்களுக்காக அமெரிக்காவுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியர்கள் ஏராளமானோர் அமெரிக்காவுக்கு விசாவுக்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு அமெரிக்க அரசு, விசாவை வழங்கியுள்ளது. இது நிரந்தர குடியுரிமை அல்லாத விசாவாகும். இந்த வகை விசாக்கள் எச்1-பி விசாக்கள் என்று அழைக்கப்பட்டு வருகின்றன. கடந்த நான்காண்டுகளாகவே அமெரிக்காவுக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடந்த ஆண்டு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விசாக்களை இந்தியர்களுக்கு அமெரிக்க அரசு வழங்கியது. இந்நிலையில் தொடர்ந்து 2-வது ஆண்டாக 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விசாக்களை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
மேலும், அமெரிக்காவுக்குச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டில் அமெரிக்காவுக்குச் செல்ல விசா கோரி 3.31 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். இதன்மூலம் அமெரிக்காவுக்கு அதிக அளவு மாணவர்களை அனுப்பும் நாடுகளில் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.