புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் ஜனவரி 12-ம் தேதி முதல் டூவீலரில் செல்வோர் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். சிறிது நாட்களுக்கு பிறகு பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை தலைமையகத்தில், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் டி.ஜி.பி ஷாலினி சிங் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் இன்று (டிச.27) இரவு ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது: “புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. புதுச்சேரியில் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் 2,000 காவலர்கள் மற்றும் 500 தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர்.
புத்தாண்டு கொண்டாடுவதற்காக கடற்கரைக்கு வருபவர்களுக்காக 10 இடங்களில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரை சாலையில் இரவு 12.30 மணி வரை மட்டுமே கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு கலைந்து சென்று விடவேண்டும். சுமார் 1.5 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். கடலில் இறங்காமல் இருக்க தடுப்புகள் அமைக்கவுள்ளோம்.
புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் 200 பேர் விபத்தில் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் மக்கள் தொகை அடிப்படையில் பார்க்கும்போது உயிரிழப்பில் முதன்மை மாநிலமாக இருக்கிறது. அதனால் உச்ச நீதிமன்றம் இதை சுட்டிக்காட்டி உத்தரவிட்டுள்ளது. அதனால் ஜனவரி 11-ம் தேதி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் தலைமையில் தலைக்கவசம் அணிவது குறித்து மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது.
ஜனவரி 12-ம் தேதி முதல் புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். முதலில் வாகனம் ஓட்டுவோர் அணிய வேண்டும். சிறிது நாட்களுக்கு பிறகு வாகனம் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணியவேண்டும். சட்டத்துக்கு உட்பட்டு நடந்தால் அபராதம் ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டியதில்லை.
மேலும், 70 காவல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப ஆளுநர் ஒப்புதலுக்காக கோப்பு சென்றுள்ளது. ஓரிரு நாட்களில் அனுமதி கிடைத்தவுடன் அறிவிப்பு வெளியாகும். 156 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்பவும் கோப்பு தயாரித்துள்ளோம். வரும் பொங்கல் பண்டிகைக்குள் காவலர்களுக்கு தேர்தல் பணிக்கான அலவனஸ் மற்றும் யூனிபார்ம் அலவனஸ் வழங்கப்படும்,” என்று தெரிவித்தார்.