புனே,
11-வது புரோ கபடி லீக் போட்டி புனேவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய முதலாவது வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, உ.பி. யோத்தாசை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய உ.பி. யோத்தாஸ் அணி முதல் பாதியில் 23-8 என்ற புள்ளி கணக்கில் வலுவான முன்னிலை பெற்றிருந்தது. இந்த சரிவில் இருந்து ஜெய்ப்பூர் அணியால் இறுதிவரை மீள முடியவில்லை.
முடிவில் உ.பி. யோத்தாஸ் அணி 46-18 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூரை பந்தாடி அரையிறுதிக்கு முன்னேறியது. உ.பி. யோத்தாஸ் அணியின் ரைடர் பவானி ராஜ்புத் 12 புள்ளிகள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.
மற்றொரு வெளியேற்றுதல் சுற்றில் 3 முறை சாம்பியனான பாட்னா பைரேட்ஸ் அணி 31-23 என்ற கணக்கில் யு மும்பாவை தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்தது. இந்த வெற்றியின் மூலம் லீக் சுற்றில் 2 முறை மும்பையிடம் கண்ட தோல்விக்கு பாட்னா அணி பழிதீர்த்து கொண்டது. பாட்னா அணியில் அதிகபட்சமாக அயன் 10 புள்ளி எடுத்தார்.